புதுடெல்லி: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் ”வீர ராஜா வீரா” பாடல் என்பது தனது தந்தை மற்றும் உறவினர் ஆகியோர் இயற்றிய சிவா ஸ்துதி என்ற பாடல் ஆகும். எனவே அதற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பாரம்பரிய இசைகலைஞர் ஜாஹிருதீன் தாகர் கோரியிருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்” இந்த விவகாரத்தில் தாகர் சகோதரர்களுக்கு கிரெடிட் கொடுப்பது தொடர்பாக நாங்கள் நீதிமன்றம் கொடுத்த யோசனையை ஏற்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இதில் ஒரு முடிவு வரும் வரையில், இடைக்கால ஏற்பாடாக அனைத்து ஓ.டி.டி மற்றும் ஆன்லைன் தளங்களிலும், வீர ராஜா வீரா பாடலுக்கு தாகர் சகோதரர்களின் பெயர்களை கிரெடிட் ஆக வழங்க வேண்டும். அதாவது குறிப்பாக,தாகர் சகோதரர்களிடம் இருந்து ஈர்க்கப்பட்ட இசையமைப்பு என்றும், முதலில் மறைந்த உஸ்தாத் பயாசுதின் தாகர் மற்றும் அவரது மருமகன் என்.ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது என்பது போன்று அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்த உத்தரவை அடுத்த ஐந்து வாரத்தில் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமைகள் வழக்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
