- இந்தியா
- அடிலெய்ட்
- ஆஸி
- டி 20
- இந்திய பெண்கள்
- ஆஸ்திரேலிய பெண்கள்
- பெண்கள் கிரிக்கெட்
- ஹர்மன் ப்ரீத் கவுர்
- ஆஸ்திரேலியா
- 3 டி20
அடிலெய்ட்: இந்தியா மகளிர் – ஆஸி மகளிர் இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி, அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், 3வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிராக இந்திய அணி, அவ்வப்போது சில போட்டிகளில் வெற்றிகளை பெற்று வந்தாலும், ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு தொடரை வெல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இதற்கு, இன்றைய போட்டியில் வென்று இந்திய மகளிர் முற்றுப்புள்ளி வைப்பர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா பேட்டிங் திறன் மீது அணி நிர்வாகம் அபார நம்பிக்கை வைத்துள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் இருவரும் இன்றைய போட்டியில் அதிரடி காட்டுவார்கள் என நம்பலாம். ஆஸி அணியில் அனுபவம் வாய்ந்த கிம் கார்த், அன்னபெல் சதர்லேண்ட், கேப்டன் சோபி மொலினியுக்ஸ் தங்கள் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல முனைப்பு காட்டுவர். அடிலெய்ட் ஆடுகளம், பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை நம் வீராங்கனைகள் சரியாக பயன்படுத்தினால் ரன்களை குவிக்க முடியும். இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் போன்றோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுட், அமன்ஜோத் கவுர் சிறப்பாக பந்து வீசி தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். ஆஸ்திரேலியா அணியில் ஜார்ஜியா வால் சிம்ம சொப்பனமாக திகழ்வார். அந்த அணியின் அதிரடி வீராங்கனைகள் சதர்லேண்ட், ஆஷ் கார்ட்னர், போப் லிட்ச்பீல்ட் ஆகியோரை கட்டுப்படுத்தினால் இந்திய அணி வெற்றியை எதிர்நோக்கலாம்.
போட்டி துவங்கும் நேரம்: பிற்பகல் 1.45 மணி (இந்திய நேரப்படி)
