×

சுத்தமல்லியில் இன்று காலை ஆட்டோ மீது தனியார் கல்லூரி பஸ் மோதல் 2 மாணவிகள் உட்பட 4 பேர் படுகாயம்: மது போதையில் மிதந்த டிரைவர் கைது

பேட்டை: நெல்லை பேட்டை அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். மது போதையில் கல்லூரி பஸ்சை இயக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே நடுக்கல்லூரை சேர்ந்தவர் பெருமாள்(42). தனது சொந்த ஆட்டோவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சுத்தமல்லி விலக்கில் இருந்து கோபாலசமுத்திரம் சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது கோபாலசமுத்திரத்தில் இருந்து நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற வாகனத்தை முந்துவதற்காக வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதியித்ல் ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் இருந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான எஸ்டீனா, செல்வபாலா மற்றும் டிரைவர் பெருமாள் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி வந்த சுத்தமல்லி விலக்கு வஉசி நகரைச் சேர்ந்த ஓட்டுநர் இசக்கியப்பன் (36) வாகனத்தை சுத்தமல்லி விலக்கில் நிறுத்திவிட்டு அதன் அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் மதுபோதையில் படுத்துவிட்டார். பொதுமக்கள் அவர் மீது தண்ணீர் தெளித்ததும் கண்விழித்த அவரை சுத்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் காயமடைந்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Suttamalli ,Pettai ,Nellai Pettai ,Nellai ,
× RELATED எதிர்க்கட்சியினரின் பொய்ச் செய்தி,...