சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவின் அடுத்தடுத்து அதிரடியால் அதிமுக கூட்டணி கலங்கி போய் உள்ளது. தேமுதிகவும் இணைந்ததால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவுக்கு இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாதது அக்கட்சியின் தொண்டர்களைச் சோர்வடையச் செய்து வந்தது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது நம் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும்.
திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, எனவே கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இணைவோம் என்று முடிவு செய்திருக்கிறார் பிரேமலதா. சமீபத்தில் ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் பிரேமலதா கலந்து கொண்டதை வைத்து, தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வரும் என செய்திகள் பரவின.
இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. இது, ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அதிமுக கூட்டணியை மேலும் பலவீனமாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் அமித்ஷாவுக்கும் தேமுதிகவின் முடிவு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. வலிமையான கூட்டணி அமைப்போம் என்று பேசிவந்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் உள்ளது.
தேமுதிகவின் இந்த முடிவு அதிமுகவுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால், அதிமுக மிகப் பெரிய வெற்றி பெற்றது. ராஜ்யசபா சீட் தருவதாகச் சொன்ன அதிமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தேமுதிகவிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
இது பிரேமலதாவின் முடிவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. வட தமிழ்நாட்டில் வலுவான கட்சியான பாமக இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. தென் தமிழ்நாட்டிலும், அமமுக மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த இணைப்பும் முழு மனதுடன் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமியை தினகரன் ஆதரவாளர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தொண்டர்களிடையே ஒற்றுமை வரவில்லை.
கடந்தகால கசப்புகளை இருகட்சித் தலைவர்களாலும் சரிகட்ட முடியவில்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களும் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருவரும் தேர்தலில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கவே நினைப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அரசியல் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் தேமுதிக தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
தேமுதிகவுக்கு பக்கபலமாக இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளும் இம்முறை சிதறாமல் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியைத் தேர்வு செய்துள்ளது தேமுதிக. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் 5,000 முதல் 25,000 வாக்குகளைக் கொண்ட தேமுதிகவைக் கூட்டணியில் சேர்ப்பதன் மூலம், இந்த இலக்கை அடையலாம் என திமுக கணக்குப் போட்டது. தற்போது தேமுதிகவின் வரவு திமுக கூட்டணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். ஏற்கனவே 42-45% வாக்கு வங்கியைக் கொண்ட திமுக கூட்டணி, தேமுதிக இணைவதால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எளிதாக அடையும் சூழல் உருவாகியுள்ளது.
திமுக-தேமுதிக ஆகிய இரு தரப்புக்கும் ‘வின்-வின்’ சூழல் என்பதால், திமுகவின் இம்முடிவு அரசியல் சாதுர்யமாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அதிமுக கூட்டணியின் தொண்டர்களை இச்செய்தி மேலும் சோர்வடையச் செய்துள்ளது. கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
* வட தமிழ்நாட்டில் வலுவா இருந்த பாமக இப்போ ரெண்டா பிரிஞ்சு கிடக்கு. தென் தமிழ்நாட்டிலும், அமமுக மட்டுமே அதிமுக கூட்டணில சேர்ந்திருக்கு. அதுவும் முழு மனசா இல்ல. டிடிவி தினகரனுக்கு எடப்பாடிய கண்டாவே ஆகல. சசிகலா, ஓபிஎஸ் எல்லாம் எந்த முடிவையும் இன்னும் எடுக்கவே இல்ல. தேர்தல்லயே நிக்க வேணாம்னு ரெண்டு பேரும் நினைக்கிறதா பேச்சு ஓடுது. இந்த அரசியல் சூழல்ல, திமுக கூட்டணில தேமுதிக சேர்ந்திருக்கு. வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணிய தேமுதிக தேர்வு செஞ்சது சரியான முடிவுனு அரசியல் விமர்சகர்கள்
சொல்றாங்க.
