தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் தொடர்பான சட்டத்தை மாற்றி அமைத்ததை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் குறித்த சட்டத்துக்கு பதிலாக நிறைவேற்றப்பட்டுள்ள விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி சட்டப் பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை மாற்றியமைத்து விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி சட்டம் என்ற சட்டம் 2025ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தில் உள்ள எட்டு பிரிவுகளை எதிர்த்து வழக்கறிஞர் சிவஞானசம்பந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். அவரது மனுவில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த 90 சதவீத நிதியை மத்திய அரசும் 10 சதவீத நிதியை மாநில அரசும் பங்கிட்டுக் கொண்டன. ஆனால், புதிய சட்டத்தில், வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் 40 சதவீத நிதியை மாநிலங்கள் பங்களிப்பாக வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்துக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டம் அதிக சுதந்திரம் வழங்கியிருந்த நிலையில், அதை புதிய சட்டத்தில் நீக்கியுள்ளனர். இந்த புதிய சட்டம் கிராமப்புற மக்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். புதிய சட்டத்தின் கீழ், பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய கிராமப்புற பகுதிகளை ஒன்றிய அரசு தான் அறிவிக்கும் என்பன உள்ளிட்ட எட்டு பிரிவுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக உள்ளது. அதனால், அவற்றை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.இதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள், அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: