×

நிலையாக இருந்து தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி பெறலாம்!

நன்றி குங்குமம் தோழி

அலங்காரப் பொருட்களும் நம் விருப்பமானவர்களுக்கு அளிக்கும் பரிசளிப்புகளும் கைவினைப் பொருட்களாக இருந்தால் கொடுப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். மரத்தினாலும், கைகளால் ஓவியங்களை வரைந்தும், அழகான கேலியோகிராஃபிகளை எழுதியும் அலங்காரப் பொருட்கள், பரிசளிப்பு பொருட்கள் போன்றவற்றை ‘தி லிட்டில் ஹேண்ட்மேடு ஸ்டோர்’ பெயரில் தயாரித்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த பிரியங்கா.

“தமிழ் மொழியில் எழுதப்படும் வாசகங்களும், பழமொழிகளும்தான் வெகுவாக வாடிக்கையாளர்களை கவர்ந்தன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தங்களுக்கு விருப்பமான தமிழ் வார்த்தைகளில் வீட்டு அலங்காரம் மற்றும் பரிசளிப்பு பொருட்களையும் வடிவமைத்து தரச் சொல்லி கேட்கின்றனர். வீட்டில் மாட்டி வைத்திருக்கும் ‘பெரிதினும் பெரிது கேள்’, ‘எண்ணம் போல் வாழ்க்கை’ போன்ற வாசகங்களை பார்க்கும்போது ஒரு தன்னம்பிக்கை எழுவதாக சொல்கின்றனர். வாசகங்களை நாங்க ப்ரின்ட் செய்வதில்லை. ஒவ்வொரு எழுத்துகளையும் கேலியோகிராஃபி ஸ்டைலில் கைகளால் எழுதுகிறேன். இதுதான் எங்க தயாரிப்புகளின் தனித்துவம்.

படைப்பாற்றலுடன் புதிய பொருட்களை தயாரிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே, இப்போது புதிதாக கோலம் வரையப்பட்ட அழகிய சிறிய மனைகளை தயாரித்தேன். வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. வட்டம் மற்றும் சதுர வடிவிலான கோலப் படிகள் பூஜை அறைகளிலும் வாசற்படிகளில் விளக்கு ஏற்றி வைக்கவும் பயன்படுத்துகின்றனர். வீட்டினுள் அலங்காரப் பொருளாகவும் கோல மனைகளை பயன்படுத்தலாம். மட்டுமின்றி வீட்டு மாடங்களில் விளக்கு ஏற்றி வைக்கும்படி சுவரில் மாட்டும் வடிவிலும் கோல மனைகள் தயாரிக்கப்படுகின்றன. கீ செயின்கள், ரிட்டன் கிஃப்டுகள், ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள் போன்றவையும் தயாரிக்கிறோம். எல்லா பொருட்களும் பெரும்பாலும் மரத்தினால் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கும்” என்றவர், தன் வேலையை துறந்து தொழில் செய்ய துவங்கியது குறித்து பகிர்ந்தார்.

“எனக்கு பெயின்டிங் மற்றும் டிசைனிங்கில் அதிக ஆர்வம் இருந்தது. அது தொடர்பாக படிக்க முடியவில்லை. பொறியியல் படிப்பை படித்துவிட்டு ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். நான்கு வருடங்களுக்கு பின்னர் வேலையை விட்டதும் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அப்போது பெயின்டிங், பேப்பர் கட்டிங், க்ளே போர்டு போன்றவற்றை தயாரித்து பழகினேன். நான் தயாரித்தவற்றை நட்பு வட்டங்களுக்கு கொடுத்து வந்தேன்.

அவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள் என்னை மேலும் செய்ய தூண்டின. நிறைய கைவினைப் பொருட்களை தயாரித்து பழகியதும் இதையே சிறு தொழிலாக தொடங்கலாம் என்ற யோசனை வந்தது. எனக்கு கேலியோகிராஃபியில் ஆர்வம் இருந்ததால் அதையும் கற்றுக்கொண்டேன். தயாரிப்பு பொருட்களில் நானே என் கைகளால் அழகான எழுத்து வடிவங்களில் வார்த்தைகளை எழுதிவிடுவேன்.

தமிழ் பழமொழிகள், வாசகங்கள் மட்டுமின்றி பெயர்கள், திருமண நிகழ்வுகளுக்கான ரிட்டன் கிஃப்டுகளில் எழுதுவது என வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கஸ்டமைஸ்டு செய்து தருகிறோம். நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகப்படியான ஆர்டர்கள் வருகின்றன. அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் வீடுகளை அலங்கரிக்கும் போது பாரம்பரியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், திருமணம் போன்ற விசேஷங்களில் வழங்கப்படும் ரிட்டர்ன் கிஃப்ட் போன்றவற்றையும் தயாரிக்கிறோம். தற்போது மக்களிடையே கைவினைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“கலை ஆர்வத்தினால் நான் சிறிதளவில் தொடங்கிய இத்தொழிலில் என்னுடன் இப்போது ஐந்து பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். என்னை போலவே கலையில் ஆர்வம் உள்ள பெண்களும், கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள விரும்பும் பெண்களும் குழுவில் உள்ளனர். அவர்களுக்கு டிசைனிங், ஹேண்ட் பெயின்டிங், கைவினை போன்ற விஷயங்களை கற்றுக்கொடுத்து பயிற்சியளித்த பின்னர் இப்போது அவர்களும் அலங்காரப் பொருட்கள் மற்றும் பரிசளிப்பு பொருட்களையும் மிக நேர்த்தியாக தயாரிக்க உதவுகின்றனர். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமையும் ஆர்வமும் இருக்கிறது. அதற்கேற்றார் போல் செயல்பட்டு என்னுடன் ஒத்துழைக்கின்றனர்.

அதிகப்படியான ஆர்டர்கள் வரும்போது சில ஃப்ரீலான்சர்ஸ்களும் எங்களுடன் இணைவார்கள். பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு பணியில் இருந்து விலகும் பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். நான் அந்த எண்ணத்தை முயற்சியாக்கி எனக்கு விருப்பமான செயலை தொழிலாக மாற்றிக்கொண்டேன். என்னைப் போன்ற பல பெண்கள் நல்ல யோசனைகளுடன் இருப்பார்கள்.

அதை செயல்படுத்த சில தயக்கங்கள் இருக்கலாம். உங்களுக்கென்ற தனித்திறமையும் ஆர்வமும் அதனை செயல்படுத்த சிறு முயற்சியாவது எடுக்க வேண்டும். இது போன்ற சிறு தொழில்களை தொடங்கும் போது நம்மை போன்ற பெண்கள் பலருக்கும் நம்மால் முடிந்த வேலை வாய்ப்பினை வழங்க முடியும். தொழில் தொடங்கும் பெண்கள், தொழில் தொய்வு ஏற்படும் போதும் நிலையாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் நல்ல முடிவுகள் கிடைக்கும்” என்றார் பிரியங்கா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags :
× RELATED அசையும் முகமூடிகள்