சென்னை: சட்டப்பேரவையில் 2026-27ம் நிதியாண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட இடைகால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதாவது: மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரபிரதேசத்தில் கடன் ரூ.7 லட்சம் கோடியாகத்தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.10.22 லட்சம் கோடி கடன் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.5.50 லட்சம் கோடி கடன் உயர்ந்துள்ளது. இது எப்படி நிதி மேலாண்மையாகும்.
* அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் 11.19 சதவீத பொருளாதார உயர்வு குறித்து நாங்கள் அல்ல, ஒன்றிய அரசுதான் கூறுகிறது. கடன் வாங்குவதில் முதலில் உள்ளதாக கூறியது எப்படியென்றால், இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் உயர்ந்த மாநிலமாக இருப்பதால்தான். உங்கள் ஆட்சி காலத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி வந்ததில்லை. உத்தரபிரதேசத்தை ஒன்றிய அரசு எப்படி கையாள்கிறது என்பது யாருக்கும் தெரியாததல்ல. தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 2024-25ல் விவசாயத் துறையினுடைய வளர்ச்சி -1.83. அதேபோல எதிர்மறை வளர்ச்சி 2023-24ல் மைனஸ் 1.96. 2014-15 முதல் 2018-2019 வரை முதன்மைத் துறை வளர்ச்சி. இதிலெல்லாம் அதிகம் பேர் பயனடைகிறார்கள். விவசாயத் துறை. அதிலெல்லாம் சுமார் 65% தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் பயன்பெறுவது முதன்மைத் துறை. அதில் 2014-15 முதல் 2018-19 வரை 5.6% இருந்திருக்கிறது. கொரோனா இருந்த ஆண்டில்கூட 5.02% இருந்தது. ஆனால், 2021-22 முதல் 2024-25 வரை முதன்மைத் துறையில் இதனுடைய வளர்ச்சி 3.85%. ஆக, உற்பத்தித் துறையை மட்டும் வைத்துக்கொண்டு பேசக்கூடாது, ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும். இன்றைக்கு அதிகமாக பயனடையக்கூடியது முதன்மைத் துறை. அந்தத் துறையில் இந்த அரசாங்கம் குறைந்துதான் இருக்கிறது.
* அமைச்சர் தங்கம் தென்னரசு: உற்பத்தித் துறையில் மட்டுமல்லாமல் சேவைத்துறையிலும் அதிக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியை கணக்கிட்டு ஒட்டுமொத்த வளர்ச்சியையே கணக்கிட வேண்டும்.
* அமைச்சர் எ.வ.வேலு: நான்கு ஆண்டு காலத்தில் உங்களுடைய ஜிடிபியையும், எங்களுடைய ஜிடிபியையும் ஒப்பிட்டு பார்க்கின்றபோது, 21.64 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபி கூடுதலாக வந்திருக்கிறது என்றால், இது பொருளாதார வளச்சியினுடைய அடிப்படை, ஒன்று. உங்கள் ஆட்சி காலத்தின் பொருளாதார வளர்ச்சியை விட தற்போது வளர்ச்சி அதிகரித்துள்ளது. வறுமை ஒழிப்பையும் உயர்த்தியதோடு, பொருளாதார வளர்ச்சியையும் எட்டியிருக்கிறோம்.
* எடப்பாடி பழனிசாமி: கொரோனா காலகட்டத்தை இதில் இணைக்கக் கூடாது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: உங்கள் ஆட்சி காலத்தில்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு விவசாயிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
* அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை அறிவித்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக 11 கல்லூரிகள் உங்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றை கட்டி, அவற்றுக்கான மருத்துவமனைகளை கட்டியது இந்த ஆட்சி. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நீங்கள் கொண்டு வந்தாலும் அது வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.
(அதைத் தொடர்ந்து அ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொந்தளித்து எழுந்தனர். ஒழுங்கு பிரச்சினை எழுப்ப கோரினர். அமைச்சரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நோக்கி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சத்தமிட்டனர். இதனால் அவையில் சில நிமிடங்கள் கடும் அமளி ஏற்பட்டது. இருதரப்பினரையும் அமரும்படி சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்)
* எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.): தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனம் ஆகிய திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள். அம்மா உணவகத்தை மூடிவிட்டீர்கள்.
* அமைச்சர் தா.மோ.அன்பரசன்: தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக தரப்பட்ட 3.45 லட்சம் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுச் சென்றது நீங்கள்.
* அமைச்சர் நேரு: அம்மா உணவகம் இன்னும் இயங்குகிறது. பெயரைக்கூட நாங்கள் மாற்றவில்லை.
* அமைச்சர் கே.என்.நேரு: பட்டினப்பாக்கம் அம்மா உணவகங்கள், சிறப்பாக நடைபெறவில்லை என்று சொன்னார்கள். நேரடியாக அதிகாரிகள். பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலையில் வார்டு எண் 125 மற்றும் 126 ஆகிய இரண்டு வார்டுகளில் அம்மா உணவகங்கள் உள்ளன. இரண்டு அம்மா உணவகங்களும் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இவ்வாறு விவாதம் நடந்தது.
