60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் மறதி நோயை குணப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பான டெமாண்டியா இந்தியா அலையன்ஸ் நிறுவனம் இணைந்து, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மறதி நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் செந்தில்குமார், மற்றும் டெமாண்டியா இந்தியா அலையன்ஸ் நிறுவன தலைவர் ராதாமூர்த்தி இடையே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு வரும் மறதி நோய் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிதல், மறதிநோய்க்கான மருத்துவ உதவி, மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுதல், மறதி நோய் உள்ளவர்களை பராமரிப்பதற்கான பயிற்சி (மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்), மறதி நோய் பற்றிய ஆராய்ச்சி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக தேசிய முதியோர் நல மருத்துவ மையம் செயல்பட உள்ளது.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளர் உமா, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா, தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குநர் தீபா, அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன் மற்றும் உயரலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: