சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தமிழ் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு ‘திருச்சி லோகநாதன் தெரு’ என்றும், தமிழ்ப்பாடகர் சங்கீத சேவகர் சீர்காழி கோவிந்தராஜன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்ட சாலைக்கு ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ என்றும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு ‘எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை’ என்றும் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, எம்எல்ஏ த.வேலு, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், அரசு உயர் அலுவலர்கள், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
