ஜாமீன் நிபந்தனைகளை மீறி இருந்தால் யூடியூபர் சங்கரின் ஜாமீனை ரத்து செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தகவல்

சென்னை: மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலமாக 3 மாதங்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வாங்கிவிட்டு, தொடர்ந்து அவதூறான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்படுவதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் அமர்வு, இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கவோ, பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் பேசி வீடியோ வெளியிடவோ கூடாது என கூடுதல் நிபந்தனைகளை விதித்ததுடன் மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர். மேலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தலைமையிலான குழு அமைத்து, சங்கரை பிப்ரவரி 2ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

பரிசோதனை அறிக்கையை பிப்ரவரி 3ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப்பர் சங்கர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். யாரையும் சந்திக்க கூடாது. வழக்கு தொடர்பாக யாரிடமும் பேச கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ஏற்கனவே நீதிபதியை மாற்றம் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சங்கரின் இந்த மனுவை ஏற்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சங்கருக்கு எதிராக கருத்து பேசி அவரை பெரிய ஆளாக்க தான் விரும்பவில்லை. யாரையும் குற்றம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சங்கரின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சங்கர் மீது மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவாகியுள்ளது. எந்த வழக்கிலும் நிபந்தனைகளை அவர் கடைபிடிக்கவில்லை. தொடர்ந்து அவதூறு வீடியோக்களை பதிவு செய்கிறார். மருத்துவ பரிசோதனையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, மருத்துவர்களின் ஆலோசனையை கடைபிடித்தால் போதும்’ என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், நிபந்தனைகளை மீறியதற்கான ஆதாரம் இருந்தால், சங்கரின் ஜாமீனை போலீசார் உடனடியாக ரத்து செய்யலாம். போலீசாரிடம் அவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக நிரூபிக்க ஏதாவது ஆதாரம் இருந்தால், எங்கள் நிபந்தனை உத்தரவை மேற்கோள் காட்டி ஜாமீனை ரத்து செய்யலாம். அதன் பிறகு, போலீசாரின் நடவடிக்கை சரியானதா, இல்லையா என்றும், அவர் உண்மையில் எங்கள் நிபந்தனைகளை மீறியிருக்கிறாரா இல்லையா என்றும் நாம் ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்தனர்.

Related Stories: