சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் நேற்று சாம்பல் புதன் நாளிலிருந்து தொடங்கியது. சாம்பல் புதன் நிகழ்வு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு 46 நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. சாம்பல் புதன்கிழமை முதல் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிக்கிறார்கள். சாம்பல் புதன் நிகழ்வு நேற்று உலகம் முழுவதும் தொடங்கியது.
கிறிஸ்தவர்கள் நேற்று காலை தேவாலயங்களில் பிராத்தனை செய்து தவக்காலம் தொடங்குவதை குறிக்கும் வகையில் சாம்பலை சிலுவை குறியாக நெற்றியில் பூசிக்கொண்டனர். தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சாம்பல் புதன் நிகழ்வு திருப்பலி, ஆராதனைகளுடன் தொடங்கியது. சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர், புனித தோமையார் மலை, பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நேற்று காலை 6 மணி முதல் திருப்பலிகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்றன.
