சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று 8வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்திய 800க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மிகவும் நியாயமானது.
அவர்களுக்கு மாத உதவித் தொகையாக புதுச்சேரியில் ரூ.5,500 வரையிலும், தெலங்கானாவில் ரூ.4,016, ஆந்திராவில் ரூ.15 ஆயிரம் வரையிலும், திரிபுரா மற்றும் டெல்லியில் ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மிக குறைவாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே மாதம் ரூ.6000 உதவித் தொகை என்ற அவர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
