சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வருகிற 26ம் தேதி சென்னை வருகிறார். அப்போது அனைத்துக்கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 6ம் தேதி தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில், வருகிற 26 மற்றும் 27ம் தேதி 2 நாள் பயணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னைக்கு வருகிறார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட கலெக்டர்கள்), காவல்துறை அதிகாரிகள் மற்றும் வரிமான வரித்துறை, சுங்கத்துறை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்களை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த பணிகள் முடிந்து, தேர்தலுக்கு தயாராக உள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருவது முக்கியத்துவத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு, மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
