சென்னை: சமூக முன்னேற்றத்திற்காக தனது புத்தகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சூடாமணிக்கு தேசிய பெண் குழந்தை தின மாநில அரசு விருது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வழங்கினார். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு மாநில அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதை வழங்குவதற்காக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 2025-26ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 13ம் தேதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துருக்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, சமூக முன்னேற்றத்திற்காக தனது சமூக சிந்தனை புத்தகங்கள் மூலம் சிறப்பாக பங்காற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சூடாமணி 2025-26ம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.
இவர் இளம் எழுத்தாளர் என்பதோடு சமூக மாற்றங்கள், இயற்கை பாதுகாப்பு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல், மற்றும் சமூக மாற்றத்திற்காக வித்திட்ட பெண்களைப் பற்றிய சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் உள்ளிட்ட 6 புத்தகங்களை எழுதி, சமூக சிந்தனைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தேனாம்பேட்டையில் நடந்த விழாவில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயமுரளிதரன், சமூக நலத்துறை இயக்குநர் சங்கீதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
