பாகிஸ்தானை பந்தாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி; இந்த வெற்றி இந்தியாவுக்கானது: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

 

கொழும்பு: டி.20 உலக கோப்பை தொடரில் கொழும்பில் நேற்றிரவு நடந்த 27வது லீக் போட்டியில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 77, கேப்டன் சூர்யகுமார் 32, ஷிவம் துபே 27, திலக் வர்மா 25 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 18 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலிங்கில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர்பட்டேல் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் வீழத்தினர். இஷன் கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: “இந்த வெற்றி இந்தியாவுக்கானது. நாங்கள் ஆட விரும்பிய அதே வகையான கிரிக்கெட்டை ஆடினோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவாக அமைந்தது.

இஷான்கிஷன் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டார். 0/1 என்ற நிலையில், யாராவது பொறுப்பேற்க வேண்டியிருந்தது, அதை அவர் அற்புதமாகச் செய்தார். கொஞ்சம் சரிவு இருந்தது, ஆனால் அதுதான் டி20 கிரிக்கெட்டின் அழகு. திலக், துபே, ரிங்கு பேட்டிங் செய்த விதம் பாராட்டத்தக்கது. முதலில் பேட் செய்யும்போது, பனிப்பொழிவு அல்லது பிட்ச் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. ஆனால் நாங்கள் எடுத்த ஸ்கோர் சராசரியை விட 15 ரன் அதிகம் என உணர்ந்தோம். 155 ரன் என்பது போட்டியை நெருக்கடியாக மாற்றி இருந்திருக்கும். ஹர்திக் புதிய பந்தை எடுத்துக்கொண்டு பொறுப்பேற்றார். பின்னர் பும்ரா தான் ஏன் உலகின் சிறந்தவர் என்பதைக் காட்டினார். அனைவரும் பங்களிப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் ஒரு அணியாக நல்ல நேரம் செலவிட்டு, அகமதாபாத் பயணத்தின் போது அடுத்த ஆட்டங்களைப் பற்றிச் சிந்திப்போம்’’ என்றார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது: “எங்கள் ஸ்பின்னர்களுக்கு இன்றைய நாள் சரியாக அமையவில்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் கொஞ்சம் பின்தங்கி விட்டனர். பேட்டிங்கை பொறுத்தவரை, சிறப்பாக தொடங்கவில்லை.

பவர்பிளேயில் 3, 4 விக்கெட் இழந்ததால், பின்னடைவானது. நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பவுலிங், பேட் செய்யவில்லை. இப்படியான போட்டிகளில் உணர்ச்சிகள் மிகவும் அதிகமாக இருக்கும். அதை நாம் சமாளிக்க வேண்டும். இன்னும் 2 நாட்களில் அடுத்த போட்டி உள்ளது. அந்தப் போட்டியை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். அடுத்த சுற்றில் இந்த போட்டி வேறு மாதிரியாக ஆகிவிடும்” என்று கூறியிருக்கிறார். இந்த வெற்றி மூலம் ஏ பிரிவில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியா சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது. கடைசி லீக் போட்டியில் 18ம் தேதி அகமதாபாத்தில் நெதர்லாந்துடன் இந்தியா மோதுகிறது. பாகிஸ்தான் 18ம் தேதி நமீபியாவுடன் மோத உள்ளது. அதில் வென்றால் தான் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய முடியும்.

 

Related Stories: