புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ‘பாரத்’ மண்டபத்தில் இன்று ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது. சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை இலக்காகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 20 நாடுகளின் உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
சுமார் 300 காட்சிப்படுத்துபவர்கள் மற்றும் 600 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், இந்தியாவின் சொந்த தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ‘ஏழு சக்கரங்கள்’ என்ற கருப்பொருளில் மனித வளம் மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்படும் இந்த மாநாடு பிப்ரவரி 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் பங்கேற்றுள்ள 600-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 2.5 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஏற்கனவே இந்தியாவில் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த அமேசான் நிறுவனம் 2.9 லட்சம் கோடி ரூபாயும், மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாயும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. ‘இந்தியாவின் தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில், தகவல் தரவு மையங்கள் பெரும் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக மாறியுள்ளன.
இந்தியாவின் தரவு கட்டமைப்பு வசதிகளை 2030ம் ஆண்டிற்குள் 9.2 ஜிகாவாட் அளவுக்கு உயர்த்தவும் பல்வேறு உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துறையில் மொத்த முதலீடுகள் 200 பில்லியன் டாலரைத் தாண்டும் என்றும், ஏற்கனவே 90 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
