கட்டாக்: பிரபல ஒடிசா மாநில பாடகி கீதா பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசா மாநிலத்தின் பழம்பெரும் பின்னணி பாடகியான கீதா பட்நாயக், கடந்த 1970ம் ஆண்டு ‘அதினா மேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் புகழ்பெற்ற இவர், பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் அக்சய மொஹந்தியுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் இப்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
இந்நிலையில் 73 வயதான பாடகி கீதா பட்நாயக் கடந்த 12ம் தேதி புவனேஸ்வரில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று கட்டாக்கில் உள்ள சதிசவுரா மயானத்தில் நடைபெற உள்ளது. இவரது மறைவுச் செய்தி கேட்டு ஒடிசா திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
