ராமேஸ்வரம், பிப்.16: தூய்மை இயக்கத்தின் சார்பாக பாம்பன், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை ஒட்டியுள்ள ராமேஸ்வரம் தீவு, புனித ஸ்தலமாகவும், கடற்கரைச் சூழலைக் கொண்டதாகவும் உள்ளது. இங்கு கடல்சார் குப்பைகள், சுற்றுலாப் பயணிகளின் அதிகப்படியான வருகை மற்றும் முறையற்ற கழிவு மேலாண்மை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டமான தூய்மை இயக்கம் சார்பாக ராமேஸ்வரம் தீவில் தூய்மைப் பணி மேற்கொண்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவில் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் தூய்மை பணிகளை தூய்மை மிஷன் மேலாண்மை இயக்குநர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகம், மாவட்ட வன உயிரினகாப்பாளர் அகில் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற தலைவர் நாசர்கான், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள்,தேசிய மாணவர் படை, உள்ளாட்சிப் பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், மீனவர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
