டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

கொழும்பு: டி.20 உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ரசிகர்களிடையே இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பரம எதிரி பாகிஸ்தானுடன் மோதுகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா, 2வது போட்டியில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா, இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

பேட்டிங்கில் இஷான்கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், திலக் வர்மா, ஷிவம் துபே என இந்தியா அசுர பலத்தில் உள்ளது. நமீபியாவிற்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவால் ஆடாத அபிஷேக் சர்மா, இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். அவர் பாகிஸ்தான் பவுலர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல் வலு சேர்க்கின்றனர். கொழும்பு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் களம் இறங்க வாய்ப்புள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான் அணியும் முதல் போட்டியில் நெதர்லாந்து, 2வது போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது. இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. 2 போட்டியையும் கொழும்பில் ஆடி இருப்பதால், அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கலாம். பேட்டிங்கில் சாஹிப்சாதா ஃபர்ஹான், கேப்டன் சல்மான் ஆகா, பாபர் அசாம் ஆகியோருடன் ஆல்ரவுண்டர்கள் சதாப் கான், முகமது நவாஸ், சைம் அயூப், ஃபஹீம் அஷ்ரப் இந்தியா பவுலர்களுக்கு சவால் அளிக்கலாம். பவுலிங்கில் ஷாகின்ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, வித்தியாசமான ஸ்டைலில் பந்துவீசும் உஸ்மான் தாரிக் ஆகியோர் நெருக்கடி அளிப்பர்.

ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்த பாகிஸ்தான், ஐசிசியின் எச்சரிக்கையால் இறங்கி வந்து விளையாடுகிறது. உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டியின் மீது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐசிசி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருவதும், இதற்கு முக்கிய காரணமாகும். அண்மை காலமாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்துள்ளது. அதுவும் உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்தியா தோற்றதே கிடையாது. அந்த சாதனையை தொடரும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா களம் காண்கிறது.

புள்ளி பட்டியல்
குரூப் ஏ
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
இந்தியா 2 2 0 4 3.050
பாகிஸ்தான் 2 2 0 4 0.932
அமெரிக்கா 3 1 2 2 0.533
நெதர்லாந்து 3 1 2 2 -1.352
நமீபியா 2 0 2 0 -2.884

* இதுவரை நேருக்கு நேர்…
இரு அணிகளும் இதற்கு முன் 16 முறை டி.20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13ல் இந்தியா, 3ல் பாகிஸ்தான் வென்றுள்ளது. உலக கோப்பையில் 8 முறை மோதியதில், 7 போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறையும் வென்றுள்ளது. கொழும்பில் இதற்கு முன் 2012ம் ஆண்டு டி.20 உலக கோப்பையில் லீக் போட்டி ஒன்றில் இரு அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 128 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் விராட் கோஹ்லி 78 ரன் விளாச, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

* மழைக்கு 60 சதவீதம் வாய்ப்பு
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால், கொழும்பில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போட்டி தொடங்குவதற்கு முன் மாலை 4 மணி முதல், 60 சதவீதம் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதனால் போட்டி தொடங்குவது தாமதமாகலாம். ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இரவிலும் விட்டுவிட்டு லேசான மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஒருவேளை போட்டி ரத்தானால், ரிசர்வ்டே கிடையாது என்பதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். கொழும்பு மைதானத்தில் சிறந்த வடிகால் வசதி இருக்கிறது. மைதானத்தை முழுமையாக மூட தார்ப்பாய்களும் உள்ளன. இதனால் கனமழை பெய்து நின்றாலும், ஒரு மணி நேரத்திற்குள் மைதானம் தயாராகி விடும்.

* இன்றைய போட்டிகள்
மோதும் அணிகள் இடம் பிரிவு நேரம்
வெஸ்ட்இண்டீஸ்-நேபாளம் மும்பை சி காலை 11 மணி
நமீபியா-யுஎஸ்ஏ சென்னை ஏ மாலை 3 மணி
இந்தியா-பாகிஸ்தான் கொழும்பு ஏ இரவு 7 மணி

டி20 ரெக்கார்டு எப்படி?
* டி.20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 2012ல் அகமதாபாத்தில் இந்தியா 192/5 ரன் குவித்தது தான் அதிகபட்சம். பாகிஸ்தான் 2022ல் துபாயில் 182/5 ரன் அடித்தது தான் அந்த அணியின் சிறந்த ஸ்கோர்.
* பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி 11 போட்டியில் 492 ரன் அடித்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 5 போட்டியில் 228 ரன் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்.
* பவுலிங்கில் பாண்டியா 9 போட்டியில் 15 விக்கெட்டும், உமர் குல் 6 போட்டியில் 11 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
* டி.20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி 6 போட்டியில் 312 ரன் அடித்து டாப்பில் உள்ளார். ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவரும் கோஹ்லி தான். மெல்போர்னில் 2022ல் 53 பந்தில் 82 ரன் எடுத்தார்.

* இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். அங்கு இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது புது காதலி மஹிகா ஷர்மாவுடன் கைகோர்த்தபடி ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தார். நேற்று மாலை இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

Related Stories: