சென்னை: சென்னை, கோயம்புத்தூர் உற்சாகம் நிறைந்த ஸ்டார்ட் அப் நகரங்கள் என ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புகழாரம் சூட்டினார். ஆராய்ச்சி தொழில் தொடக்கநிலை மற்றும் தொழில் முனைவோருக்கான 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் பல நலத்திட்டங்கள், பிரதமர் உஜ்ஜ்வலா திட்டம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச எரிவாயு இணைப்புகள், பிரதமர்ஸ்வநிதி 4 லட்சம் தெரு வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர். பிரதமர் ஆவாஸ் 20 லட்சம் வீடுகள் 8 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில் தமிழர்கள் மகத்தானவர்கள் அந்த மகத்துவம் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசு வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல. ஸ்டார்ட்அப், தொழில் முனைவோர் எண்ணம் வளர வேண்டும். ஸ்டார்ட்அப் என்பது மட்டும் அல்ல. தோல் தொழில், வேளாண்மை, பாரம்பரிய கைவினை அனைத்தும் ஸ்டார்ட்அப் ஆகலாம்.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மிகவும் செயல்பாட்டும், உற்சாகமும் நிறைந்த ஸ்டார்ட்அப் சூழல் கொண்ட நகரங்கள். ஆனால் ஸ்டார்ட்அப்புகள் இந்த இரண்டு நகரங்களிலிருந்து மட்டுமே வருகின்றன என்பதல்ல. சேலம், தஞ்சாவூர் போன்ற இடங்களிலிருந்தும் ஸ்டார்ட்அப்புகள் உருவாகி வருகின்றன. ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு உதவி திட்டமும் உங்கள் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. ஆகையால் இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால், மோடி அரசின் கீழ் வாய்ப்புகள் வருகிறது. நீங்கள் பணம் செலவிட வேண்டியதில்லை. எங்கும் செல்ல வேண்டியதில்லை. உங்கள் நேரமும் சக்தியும் வீணாகாது. எல்லாமே உங்கள் மொபைலில் கிடைக்கிறது. நீங்கள் ஒரு முழுமையான தொழில் சூழலை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
