நாகர்கோவில் : குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அடுத்த பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (49). மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, கன்னியாகுமரி அடுத்த தெற்கு கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்த விக்டர் ராஜதாஸ் என்பவர், ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் கொடுக்க வேண்டும். ஆனால் இதை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் விக்டர் ராஜதாஸ் நடத்தி வரும் எலக்ட்ரானிக் கடைக்கு சென்று, பணத்ைத ஜெயக்குமார் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ெஜயகுமார், தனது சகோதரர் விஜயகுமாருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரும் வந்து, விக்டர் ராஜதாசிடம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்டர் ராஜதாஸ் திடீரென காரில் ஏறி வேகமாக எடுத்து ஜெயகுமார், விஜயகுமாரை இடித்து தள்ளி விட்டு உங்களை கொல்லாமல் விட மாட்டேன் என மிரட்டி விட்டு சென்றார். கார் மோதியதில் விஜயகுமார் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
