சங்ககிரி, பிப்.14: இடைப்பாடி அருகே 17 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தறித்தொழிலாளி விக்னேஷ்(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால், விக்னேஷ் சிறுமியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் தனத்துக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், குழந்தைத் திருமணம் செய்து கொண்டது உறுதியானது. இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனம் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, எஸ்எஸ்ஐ கலையரசி ஆகியோர் குழந்தை திருமணம் செய்த விக்னேஷ் மீது, போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
