பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், அங்குள்ள நீரோடைகள் வறண்டு வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை சில மாதங்கள் விட்டு விட்டு பெய்தது. பருவமழை காரணமாக வனப்பகுதியில் உள்ள அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகளவு இருந்தது. இதனால், வனப்பகுதியில் ஆங்காங்கே புதிய சிற்றருவிகள் உருவானது. இதில் குரங்கு அருவி மற்றும் அருகே உள்ள நவமலை நீரோடையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. ஆனால், தண்ணீர் வரத்து கடந்த டிசம்பர் மாதம் வரை ஓரளவு இருந்தது. அதன்பின் மழை இல்லாமல் போனதால், கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி மற்றும் நீரோடைகளில் குறைந்த அளவே தண்ணீர் வரத்து இருந்தது.
இந்நிலையில், இந்த மாதம் துவக்கத்தில் இருந்து கவியருவி மற்றும் நவமலை நீரோடையில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து அப்பகுதி வறண்டு வருகிறது. மேலும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதால், அடர்ந்த வனத்திலிருந்து விலங்குகள், வெளியேறி நீர்நிலைகளை தேடி வருகிறது. இவை அடிக்கடி குடியிருப்பு பகுதி மற்றும் சாலையோரத்தில் உலா வரத் துங்கி உள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி கண்காணித்து வருகின்றனர்.
