அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாட வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: சுதந்திர போராட்டத்தின் போது பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் எழுதிய வந்தே மாதரம் தேசிய பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. இப்பாடலின் 150ம் ஆண்டை ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தேசிய கீதத்திற்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜனவரி 28ம் தேதியிட்ட அறிவிப்பில் முதற்கட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி வருகை, தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆளுநர்களின் உரைகள் போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு முன்பாக பாடப்பட வேண்டும். இப்பாடல் பாடப்படும் போதோ அல்லது ஒலிக்கப்படும் போதோ பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும். சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் விதிவிலக்காக பார்வையாளர்கள் அமர்ந்திருக்கலாம். ஜனாதிபதி பங்கேற்கும் எந்த அரசு, பொது நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் ஒலிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அன்றைய தினம் தேசிய பாடலை பாடுவதன் மூலம் தொடங்கலாம். தேசிய பாடல், தேசிய கீதம் பாடுவதை ஊக்கப்படுத்தவும் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: