இஸ்லாமாபாத்: ஐசிசி மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு பணிந்த பாகிஸ்தான், வரும் 15ம் தேதி கொழும்பு நகரில் இந்தியாவுடன் உலகக் கோப்பை டி20 போட்டியில் ஆட சம்மதம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்கும்படி பிசிசிஐ வலியுறுத்தியது.
அதனை ஏற்று, முஸ்தபிசுர் நீக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆட மாட்டோம் என்றும், அப்போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. கடைசி நேரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்தது.
அதன் பின்பும், தனது முடிவில் பிடிவாதமாக இருந்த வங்கதேச கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக, ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இந்த சம்பவங்களின்போது வங்கதேசத்துக்கு ஆதரவாக பேசி, அதனை உசுப்பேற்றி வந்த பாகிஸ்தான், கொழும்பு நகரில் வரும் 15ம் தேதி இந்தியாவுடன் திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் மட்டும் ஆடப் போவதில்லை என அறிவித்தது.
அது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரியளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியா – பாக். போட்டி குறிப்பிட்டபடி நடக்காவிட்டால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும், பாக். மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பாக்.கை வலியுறுத்தின. இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பாக். பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை தொலைபேசியில் அழைத்து, தனது முடிவை மாற்றிக் கொள்ளும்படி வலியுறுத்தினார்.
இப்படியாக, ஐசிசி தரப்பிலும், சர்வதேச நாடுகள் தரப்பிலும் தரப்பட்ட அழுத்தங்களுக்கு பணிந்த பாக் அரசு, இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பாக். அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: பலதரப்பு பேச்சுவார்த்தையாலும், நட்பு நாடுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்றும், வரும் 15ம் தேதி இந்தியாவுடன் பாக். கிரிக்கெட் அணி போட்டியில் ஆட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மாண்பை பாதுகாக்கும் நோக்கிலும், உலளாவிய இப்போட்டிக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
