தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த அக்.27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர். இதில், சிறப்பு தீவிர திருத்த பணியின்போது உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதனையடுத்து, வரைவு வாக்​காளர் பட்​டியல் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் பிப்.10ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என ஒட்டுமொத்தமாக 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம் பேர், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது. மேலும், வரும் 17ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்தப் பட்டியலே வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்களிப்புக்கு அடிப்படையாக அமையும். இறுதி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தலுக்கு முன் கோரிக்கை வைக்க முடியாது என்பதால், தற்போது திருத்தம் கோரியவர்கள் அனைவரும் தங்கள் பெயர் சரியாக சேர்க்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: