×

சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் நகராட்சி மார்க்கெட் கடைகளின் கட்டுமான பணிகள் தீவிரம்

ஊட்டி : சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுமான பணிகள் வேகம் எடுத்துள்ளது.ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுமார் 1700க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த மார்க்கெட் கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

இதனால், இந்த மார்க்கெட்டை மேம்படுத்துவதுடன், பழமையான கட்டிடங்களை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இந்நிலையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்டும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கியது.

முதற்கட்டமாக காபி அவுஸ் பகுதிக்கு அருகே உள்ள பன்றி இறைச்சி கடைகள் முதல் எலக்ட்ரிக்கல் கடை வரை 190 பழுதடைந்த கடைகள் இடித்து விட்டு கட்டுமான பணிகளை துவக்கியது. தரைத்தளத்தில் 126 நான்கு சக்கர வாகனங்கள்,163 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் பார்க்கிங் தளமும், முதல் தளத்தில் 240 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக இடிக்கப்பட்ட கடைகள் இருந்த இடத்தில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால், இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக கட்டுமான பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுமான பகுதிகள் ஒரு பகுதியில் முடிந்த நிலையில் அந்த கடைகளுக்கு கூரை அமைக்கும் பணிகள்,பூச்சு வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அதற்கு முன்னதாக இந்த கடைகளில் ஒரு பகுதி கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து, கடைகளை திறப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக இந்த கடைகள் கட்டுமான பணிகள் முடிந்தால், இம்முறை கோடைகாலத்தில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த நகருக்குள் மிகப்பெரிய பார்க்கிங் வசதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ooty Municipal Market ,
× RELATED 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்