×

புளியங்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

*கலெக்டர் கமல்கிஷோர் பங்கேற்பு

புளியங்குடி : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பணியின்போது காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதைதொடர்ந்து புளியங்குடி நகராட்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

நிகழ்ச்சியில் புளியங்குடி நகராட்சி ஆணையர் நாகராஜ், நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிசாமி, நகர மேற்கு பகுதி செயலாளர் நாகூர் கனி, பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் மாதவராஜ், மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் கமல் கிஷோர் கூறுகையில், ‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் திங்கள் கிழமை காலை சிற்றுண்டியாக இட்லி, மெது வடை, சாம்பார் மற்றும் இரவு உணவாக இட்லி, கார சட்னி, சாம்பாரும், செவ்வாய்க் கிழமை காலை சிற்றுண்டியாக ரவா கிச்சடி, சாம்பார் மற்றும் இரவு உணவாக சப்பாத்தி, வெஜிடெபிள் குருமாவும், புதன் கிழமை காலை சிற்றுண்டியாக பொங்கல், சாம்பார் மற்றும் இரவு உணவாக ரவா கிச்சடி, சாம்பாரும், வியாழன் கிழமை காலை சிற்றுண்டியாக ரவா உப்புமா, தேங்காய் சட்னி மற்றும் இரவு உணவாக சப்பாத்தி,

சென்னா மசாலாவும், வெள்ளிக் கிழமை காலை சிற்றுண்டியாக இட்லி, மெதுவடை, சாம்பார் மற்றும் இரவு உணவாக இட்லி, கார சட்னி, சாம்பாரும், சனிக்கிழமை காலை சிற்றுண்டியாக ரவா பொங்கல், சாம்பார் மற்றும் இரவு உணவாக ரவா உப்புமா, சட்னியும், ஞாயிற்றுக்கிழமை காலை சிற்றுண்டியாக சேமியா கிச்சடி, சாம்பார் மற்றும் இரவு உணவாக சப்பாத்தி, குருமாவும் தூய்மைப்பணியாளர்கள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரமாகவும் வழங்கப்படுகிறது. புளியங்குடி நகராட்சியில் மூலம் 243 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர்’ என்றார்.

Tags : Puliangudi Municipality ,Puliangudi ,Tamil Nadu ,Chief Minister ,Chennai ,K. Stalin ,Puliangudi Municipal Private Hall ,
× RELATED 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்