கடையாலுமூடு அருகே இன்று அதிகாலை மலைக்கிராம மக்களை துரத்திய யானை: அலறியடித்து கொண்டு ஓட்டம்

அருமனை: அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட வழுக்கம்பாறை மலைக்கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை பஸ் நிறுத்த பகுதிக்கு வந்தது. யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினர். காட்டு யானையும் மக்களை பின்தொடர்ந்து துரத்தி சென்றது. எனினும் கிராம மக்கள் அங்கிருந்த வீட்டுக்குள் சென்று பாதுகாப்பு அடைந்தனர்.

இதையடுத்து காட்டு யானை வழுக்கம்பாறை குடியிருப்பு பகுதி வழியாக சென்றது. இதனால் குடியிருப்புவாசிகள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர். இதனை தொடர்ந்து யானை அங்கிருந்து வெளியேறி காலை 5.30 மணிக்கு சிற்றாறு அருகே உள்ள சிலோன் காலனிக்கு சென்றது. அப்போது அங்கு நின்ற மக்கள் யானையை கண்டதும் அலறியடித்து கொண்டு ஓடினர். அவர்களையும் ஒற்றை யானை சிறிது தூரம் துரத்தி சென்றது. இவ்வாறு மக்களை பீதியடைய செய்த காட்டு யானை பின்னர் ஒவ்ெவாரு பகுதி வழியாக சென்று தற்போது படகுஇல்லம் அருகே உள்ள மறைவிடத்தில் சுற்றிதிரிந்து வருகிறது. ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் காலையில் ரப்பர் பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலையில் உள்ள கூப்பு பகுதியில் அவ்வப்போது காட்டுத்தீ பிடித்து எரிகிறது. இதனால் யானைகள் மலையில் இருந்து வெளியேறி மலைக்கிராமங்களுக்கு வருகின்றன. மேலும் மலையில் அதிகளவில் கொசுக்கடியாலும், யானைகள் செல்லும் வழித்தடத்தில் முள்வேலி அமைத்த காரணத்தாலும் யானைகள் குடியிருப்பு கிராமங்களுக்கு வருகின்றன. எனவே வனத்துறையினர் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: