- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ஐரோப்பிய ஒன்றிய
- முதல் அமைச்சர்
- முகா
- அணி
- விருதுநகர்
- கே. ஸ்டாலின்
- பஜாஜ்
- திமுகா தென் மண்டல இளைஞர் நிர்வாகிகள்
- Kalkurichi
- விருதுநகர் மாவட்டம்
- அருப்புக்கோட்டை
விருதுநகர்: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஜீரோ தந்த பாஜவுக்கு தேர்தலில் அதே ஜீரோவை திருப்பித் தருவோம் என்று விருதுநகரில் நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று மாலை பிரமாண்டமாக நடந்தது. கூட்டத்துக்கு துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இதற்காக, கல்குறிச்சி நான்கு வழிச்சாலை அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு வரவேற்றார். வேனில் வந்த முதல்வர், மேடையின் முன்பகுதியில் இருந்து இறங்கி சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டிருந்த பாதை வழியாக நடந்தவாறே மேடைக்கு சென்றார். அப்போது இருபுறமும் கூடியிருந்த இளைஞரணியினர் முதல்வருக்கு கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நான் வெளியிட்ட வீடியோவில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவது, எதற்காக திமுக தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான். நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் என்ன? சமூகநீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, மொழியுணர்வு, இன உணர்வு. மொழியுணர்வையும், இனவுணர்வையும் எடுத்துக் கொண்டால், நம்முடைய தாய்மொழியான தமிழுக்குப் பல்வேறு கால கட்டங்களில், ஆபத்து வந்தபோது, கடுமையாகப் போராடி தடுத்திருக்கிறோம்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து இன்றைக்கும் நம்முடைய தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது. மொழியை அழித்தால், நம்முடைய அடையாளத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதை நீங்கள் முறியடிக்கவேண்டும். அடுத்து, முக்கியமான கொள்கை சமூகநீதி. நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து டிகிரி வாங்கியிருப்பீர்கள். உங்கள் அப்பா-அம்மாக்களில் பலர் படித்திருப்பார்கள். ஆனால், உங்கள் தாத்தா-பாட்டி அவர்களுடைய நிலைமை என்னவாக இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
நமக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்… வேலைகளில் நமக்கு இடம் கிடைக்காது, இருக்காது. அந்த அநீதியை இடஒதுக்கீட்டால் உடைத்து, சமூகநீதியை நிலைநிறுத்தினோம். ஆனால், இப்போது நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டு வந்து, பழைய நிலைமையை உண்டாக்குகிறார்கள். இதைத் தடுக்க உண்மையான வலிமையுள்ள ஒரே இயக்கம், நம்முடைய இயக்கம்தான். அடுத்து, நம் உயிர்க் கொள்கை மாநில சுயாட்சி. மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா. மாநிலங்களுக்கு அதிகாரங்களே இல்லாத நிலைமைதான் இருந்தது.
மாநிலக் கட்சிகளால், ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆட்சியமைத்துக் காட்டியதே திமுகதான். அடுத்து, நம்முடைய உறுதிக் கொள்கை சுயமரியாதை. ஒவ்வொரு தனிமனிதரின் சுயமரியாதையையும் காப்பாற்றி, தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றால், இப்போது, அடிமைகளும் – துரோகிகளும், எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு, ஒட்டுமொத்த மாநிலத்தின் சுயமரியாதையையும் அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் கூட்டத்தை வீழ்த்த நீங்கள் அனைவரும் தேவை.
உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமானால், ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நாம்தான் ஏழாவது முறையும் ஆட்சி அமைக்கப் போகிறோம். அடுத்ததாக நான் சொன்னது, எதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று.
ஒன்றிய அரசின் ரேங்கிங் ஆனாலும் சரி, நேஷனல் மேகசின்கள் வெளியிடும் ரேங்கிங் ஆனாலும் சரி, எக்கனாமிஸ்ட் மாதிரி இண்டர்நேஷனல் இதழில் வரும் செய்திகள் ஆனாலும் சரி, அனைத்து ரேங்கிங்கிலும் தமிழ்நாடுதான் ‘டாப்’. தமிழ்நாடுதான் ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. ஒன்றிய அரசு மாநிலங்களை ஒப்பிட்டு எந்தத் துறையில் விருதுகள் கொடுத்தாலும், அதைத் தமிழ்நாடுதான் வாங்குகிறது. இவ்வாறு, அனைத்திலும் நாம் ‘நம்பர் ஒன்’ ஆக இருந்தாலும், பட்ஜெட் என்று வந்துவிட்டால் நமக்கு ஒன்றும் கிடையாது.
இந்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்தாவது, ஏதாவது எலக்ஷன் ஸ்டண்ட் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம். கடைசியில் அதுவும் இல்லை. வழக்கம்போல ஈரத்துண்டுதான். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய கல்வி நிதி, மெட்ரோ நிதி, பேரிடர் நிவாரண நிதி, ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதி, புதிய ரயில் திட்டம், ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி, வரி வருவாயில் 50 சதவிகிதம், நீட்டில் இருந்து விலக்கு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கேட்கிறோம்.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கையைக் கொடுங்கள், இதையெல்லாம்தான் நாங்கள் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்கிறோம். ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்தது வெறும் ஜீரோ. அப்போது நாமும் அவர்களுக்கு எலக்ஷனில் அதையேதான் திருப்பித் தர வேண்டும். பாஜ மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக என்டிஏ கூட்டணியும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் போன்றே, சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும்.
நடக்க இருக்கும் தேர்தல், ஒட்டுமொத்த தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ. இதில் நாம் தமிழ்நாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தோல்வி என்பது பாஜவிற்கு புதிது இல்லை. தினமும் காலையில் சூரியன் உதிப்பதைப் போன்று அவர்களுக்கு அது ஒரு ரொட்டீன். ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பாஜவும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டெல்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுகவும் அடையப் போகிறது.
இதுவரை அடைந்த வெற்றிகளைவிட மிகப்பெரிய வெற்றியைத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அடையப் போகிறது. வளர்ந்த தமிழ்நாட்டை, மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம். அதற்கு இளைஞரணியினர் உங்களுடைய முழு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும். அடுத்து வெற்றி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம்.
தமிழ்நாடா, என்டிஏவா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, நாடாளுமன்ற குழு தலைவரும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திமுக துணைப் பொதுச்செயலாளரும்,
அமைச்சருமான ஐ.பெரியசாமி, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா,
துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான அந்தியூர் செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் மற்றும் தென் மாவட்ட திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா நன்றி உரையாற்றினார்.
* துணை முதல்வருக்கு பாராட்டு
முதல்வர் பேசுகையில், ‘‘நான் பார்த்துப் பார்த்து வளர்த்த இளைஞரணியில், உங்களையெல்லாம் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சி டபுள் ஆகிறது, ட்ரிபுள் ஆகிறது. நம்முடைய திராவிட இனத்தின் மேன்மைக்காக, தமிழ்மொழியின் உயர்வுக்காக, தனித்துவமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உங்கள் அனைவரையும் கொள்கைப் பிடிப்போடும் கழகப்பற்றோடும் வளர்த்தெடுக்கிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. அவரின் செயல்பாடுகளை நான் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஏதோ பெயரளவிற்கு இளைஞர்களை அரசியல் இயக்கத்தில் சேர்த்தால் போதும் என்று செயல்படவில்லை. இளைஞரணி நிர்வாகிகளை மிகவும் சிஸ்டமேட்டிக்காக, பூத் அளவில் தொடங்கி, மாநில அளவு வரைக்கும் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, உங்களை ‘நியூ ஏஜ் திரவிடியன் ஸ்டோக்’ ஆக உருவாக்குகிறார். நீங்கள் ஒவ்வொருவரும்தான் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுகள். பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வாரிசுகள். முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வாரிசுகள். நீங்கள்தான், அடுத்து நம்முடைய கழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்பாற்றப் போகிறீர்கள்’’ என்றார்.
* முதல்வரின் ‘ரேம்ப் வாக்’ : தொண்டர்கள் உற்சாகம்
திமுக தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5.10 மணியளவில் வந்தார். வரும் வழியில் அவருக்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வருகைக்காக நுழைவாயில் முதல் விழா மேடை வரை ரேம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரேம்ப் வாக் மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.50 லட்சம் தொண்டர்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்ந்தபடி நடந்து வந்தார்.
தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி கை குலுக்கியபடியும், நலம் விசாரித்தபடியும் வந்தார். அப்போது, ஒரு தொண்டர் கட்சித்துண்டை வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட முதல்வர், தோளில் போட்டுக் கொண்டார். வெயிலையும் பொருட்படுத்தாது 500 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட ரேம்ப் வாக் மேடையில் முதல்வர் நடந்தது வந்தது, தொண்டர்களை மகிழச் செய்தது. முன்னதாக, விழா மேடைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாலை 4.25 மணிக்கு வந்தார். அவரும் ரேம்ப் வாக்கில் நடந்து சென்று, இளைஞர்களுடன் கை குலுக்கினார்.
* வெள்ளை சீருடை அணிந்து மிடுக்குடன் அணிவகுப்பு
தென்மண்டல இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாநகர், ஒன்றியம், பேரூர், ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வெள்ளை சீருடை அணிந்து அணிவகுத்து வந்தனர்.
டீ சர்ட்டின் முன் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படமும், தமிழ்நாடு தலைகுனியாது என்ற வாசகமும், பின்பக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் திமுக இளைஞரணி வெற்றி மாநாடு என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.
* பாஜவின் கிளை செயலாளர் எடப்பாடி
முதல்வர் மேலும் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பாஜவின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவர் இப்போது என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று சொல்வது போன்று, மைக் முன்னால் நின்று கொண்டு, “நான்தான் கூட்டணிக்குத் தலைமை, நான்தான் கூட்டணிக்குத் தலைமை” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சொல்லவில்லை… புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஒரு வித்தியாசமான போராட்டத்தை இப்போது அவர் அறிவித்திருக்கிறார். பாஜ அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலைத் திட்டத்தை நாம் தடுக்கிறோமாம். அதற்காகப் போராட்டமாம். அவர் முதலில் அந்தச் சட்டத்தைப் பற்றி எதையாவது படித்தாரா? அந்தச் சட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியுமா? அப்படி இருந்தால், அவருடைய அறிக்கையில் அதை ஏன் குறிப்பிடவில்லை? 100 நாள் வேலை என்பது, உரிமையாக இருந்தபோதே 50 நாள்கூட பாஜ அரசு வேலை தரவில்லை.
இப்போது எவ்வாறு 125 நாள் கொடுப்பார்கள்? இனி மாநில அரசுதான் 40 விழுக்காடு நிதியைத் தர வேண்டும் என்று வேறு மாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் பழனிசாமிக்கு தெரியுமா, தெரியாதா? என்ன சட்டம், என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாமல், இவர் வந்தால் 150 நாட்களுக்கு உயர்த்துவோம் என்று வேறு அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இப்போது இருக்கிறார் பழனிசாமி’’ என்றார்.
