மோடி ஒப்புக்கொண்டு விட்டார் அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் இனி வரி இல்லை: அமெரிக்க வர்த்தக அதிகாரி அறிவிப்பு

நியூயார்க்: இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் விதித்து இருந்த வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைத்தது. இதுபற்றி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையே மேற்கொள்ள இருக்கும் ஒப்பந்தம் மிகப்பெரிய வெற்றி. இப்போது எங்களிடம் ஒப்பந்தம் உள்ளது. நாங்கள் அதை ஆவணமாக மாற்றி முடிப்போம். எங்களுக்கு அதில் இடம் பெற இருக்கும் முழு விவரங்கள் தெரியும். இது அமெரிக்காவுக்கு மிகவும் உற்சாகமான வாய்ப்பு. அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 18 சதவீத வரியை தொடர்ந்து விதிக்கும்.

ஆனால் அவர்கள் பல்வேறு விவசாய பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், ரசாயனங்கள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றுக்கான வரிகளைக் குறைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா ரஷ்ய எண்ணெயை இனி வாங்குவதில்லை என்று உறுதியளித்துள்ளது. பிரதமர் மோடியும் முக்கிய அமெரிக்க துறைகளில் ரூ.45 லட்சம் கோடி முதலீடுகளுக்கு ஒப்புக்கொண்டார். அதேபோல் அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் வரிகளையும் வரி அல்லாத தடைகளையும் இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும்.

அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல அமெரிக்க பொருட்களை வாங்கவும் மோடி உறுதியளித்துள்ளதார். இந்தியாவில் தொழில்துறை பொருட்களுக்கான சராசரி வரி தற்போது 13.5 சதவீதமாக உள்ளது. இனி கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் அது பூஜ்ஜியமாகப் போகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விவசாயப் பொருட்களுக்கான வரி பூஜ்ஜியமாகப் போகிறது. அமெரிக்கா உட்பட உலகின் ஒவ்வொரு நாட்டையும் போலவே, இந்தியாவும் சில முக்கிய பொருட்களுக்கு சில பாதுகாப்பைக் கொண்டுள்ளது. அதை தொடர்ந்து அவா்கள் கட்டுப்படுத்துவார்கள்.
​​
2022-23 க்கு முன்பு, இந்தியா உண்மையில் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யவில்லை.தடைகள் காரணமாக வேறு எந்த நாடுகளுக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயைப் பெற முடியாததால், தள்ளுபடியில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த சூழ்நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, இந்தியர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தத் தொடங்கினர். இனி ரஷ்ய எண்ணெயை வாங்காமல் இருப்பது மட்டுமல்லாமல், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கும், ஒருவேளை வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

* எதற்கெல்லாம் வரி இல்லை
அமெரிக்க வர்த்தக அதிகாரி ஜேமிசன் கிரேர் கூறுகையில்,’பாதம், முந்திரி, வால்நட், பிஸ்தா, ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பல்வேறு அமெரிக்க இறக்குமதி விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் இனிமேல் வரி இல்லை. இது ஒரு பெரிய வெற்றி. அதே சமயம் இந்தியா ஏற்றுக்கொள்ளாத வர்த்தகப் பகுதிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப தடைகள் குறித்தும் இந்தியர்களுடன் எங்களுக்கு ஒரு புரிதலும் உடன்பாடும் உள்ளது’ என்றார்.

Related Stories: