×

குடிசைமாற்று வாரியத்தில் பணம் கட்டியவர்களிடம் வீடுகளை ஒப்படைக்காவிட்டால் சாலை மறியல்

அரியலூர், பிப்.2: அரியலூர் நகரில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 288 வீடுகளுக்கு பணம் கட்டியவர்களுக்கு உடனே வீடுகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று பயனாளிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒருவாரத்தில் வீடுகளை குலுக்கல் நடத்தி சீர்செய்து ஒப்படைக்காவிட்டால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் நகரில் வீடுஇல்லாத, ஏழ்மைநிலையில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தால் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரூ.23. 43 கோடியில் 288 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகளுக்கு தேர்வானவர்களிடம் இருந்து வீட்டிற்கான மதிப்புத்தொகையாக 90 ஆயிரம் ரூபாய் டிடியாக ஒவ்வொருவரிடம் இருந்தும் பெறப்பட்டு ஒரு வருடமாகிறது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தாக்கம் அதிகமானதையடுத்து இந்த குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தற்காலிக கொரோனா மையமாக மாற்றப்பட்டு, நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக இவ்வீடுகளில் யாரும் தங்கவைக்கப்படவில்லை. இதனையடுத்து வீடுகளுக்கு பணம் கட்டியவர்கள் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கித்தர மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுக்கு ஆதரவாக திமுக கட்சியினரும் நேற்று ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனுஅளித்தனர். அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சிலரை மட்டும் கலெக்டரிடம் மனுஅளிக்க போலீசார் அனுமதித்தனர். இதன்பேரில் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் பணம் கட்டிய பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ரத்னாவை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக மாவட்டச்செயலாளர் சிவசங்கர், பணம் கட்டிய பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை ஒதுக்கீடு செய்துதரவேண்டும். கட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சீர்செய்து வீடுகளை வழங்கவேண்டும். ஒருவாரத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் திமுக கட்சி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தார்

Tags : houses ,Slum Board ,
× RELATED காரியாபட்டியில் விடிய விடிய கனமழை:...