இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பீகார் தேர்தலை குறிவைத்து, அந்த மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுவைக்கு பெரிய அளவிலான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை மாநில அரசால் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1. தமிழ்நாடு
* தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் பிரத்யேக அரிய மண் தாதுப் பெருவழித்தடங்களை அமைப்பதற்காக மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உதவும் என்ற முன்மொழிவாகும்.
* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 7 அதிவேக ரயில் தடங்களில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளன. அவை ஐதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு.
* சென்னை பழவேற்காடு ஏரி பகுதியில் பறவைகளை பார்க்க பார்வையாளர் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்தை ஒரு துடிப்பான, அனுபவமிக்க கலாச்சாரத் தலமாக மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலை, உலகத் தரம் வாய்ந்த மலையேற்றம் மற்றும் நடைப்பயண அனுபவங்களை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
* தேங்காய் உற்பத்தியில் முன்னிலை வகிப்பதால் தேங்காய் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் மீது கவனம் செலுத்தும் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நகரப் பொருளாதாரப் பகுதிக்கும் 5 ஆண்டுகளில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கோயில்கள் கொண்ட தமிழ்நாடு பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளா
* பிரத்யேக அரிய மண் தாதுப் பெருவழித்தட பட்டியலில் கேரளாவும் இணைக்கப்பட்டுள்ளது.
* கேரள எல்லையில் உள்ள பொதிகை மலை மலை ஏற்ற பயணத்தில் கேரளாவும் பயன்பெறும் வகையில் திட்டம் அமைந்துள்ளது.
* தேங்காய் மேம்பாட்டு திட்டமும் கேரளாவில் அமல்படுத்தப்படும்.
3. மேற்கு வங்கம்
* மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் நன்கு இணைக்கப்பட்ட முனையத்துடன் ‘கிழக்கு கடற்கரை தொழில்துறைப் பெருவழித்தடம்’ அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
* பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஐந்து சுற்றுலாத் தலங்களை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
* குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள டான்குனி ஆகியவற்றை இணைக்கும் பிரத்யேக சரக்கு போக்குவரத்துப் பெருவழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சரக்கு போக்குவரத்துப் பெருவழித்தடம், கிழக்கு முதல் மேற்கு வரை இரு மாநிலங்களுக்கும் இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும். மேலும் தளவாடங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக புதிய பெருவழித்தடங்களை அமைக்கும்.
* 7 அதிவேக ரயில் தடத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரிக்கும் இடையே ஒரு வழித்தடம் அமைய உள்ளது.
4. அசாம்
* அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவற்றுடன் சேர்ந்து பவுத்த சுற்றுலாதலங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கோயில்கள் மற்றும் மடங்களைப் பாதுகாத்தல், யாத்திரை விளக்க மையங்கள், இணைப்பு வசதிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகள் இடம்பெறும்.
* மனநலப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாக, அஸ்ஸாமின் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல நிறுவனம் ஒரு பிராந்திய உச்ச நிறுவனமாகத் தரம் உயர்த்தப்படும்.
* வடகிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை விரைவுபடுத்துவது குறித்த அறிவிப்பால் அசாம் பயன்பெறும்.
* சந்தனம், கோகோ, முந்திரி மற்றும் அசாமில் உள்ள அகர் மரங்களுக்கான ஆதரவு அறிவிப்பாலும் அசாம் பயன்பெறும்.
* தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் தவிர்த்த பெரும்பாலான திட்டங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றும் சாதாரண திட்டங்கள். வழக்கமாக இதுபோன்ற திட்டங்கள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இடம்பெறாது. ஆனால், இதையெல்லாம் பெரிய திட்டங்கள் போல் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்தது இதுவே முதல்முறை.
* மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் தமிழ்நாட்டின் கோரிக்கை நிராகரிப்பு
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையும் ஒன்றிய பட்ஜெட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டுடன் 16வது நிதிக்குழு அறிக்கையையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனாகரியா தலைமையிலான குழு தயாரித்த இந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிர்மலா சீதாராமன், ‘‘நிதிக்குழு பரிந்துரைப்படி வரும் 2031 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாக தொடரும். இதன்படி 2026-27ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு நிதிக்குழு மானியமாக ரூ.1.4 லட்சம் கோடி வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
* மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி
கொரோனா பரவல் காரணமாக சுமார் 6 ஆண்டுகள் தாமதமாக அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இப்பணிக்காக ரூ.6,000 கோடி ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக், காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய பனி படர்ந்த பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் அக்டோபர் 1ம் தேதியிலிருந்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதியிலிருந்தும் தொடங்கப்படும்.
* பிஎஸ்என்எல்.க்கு ரூ.28,473 கோடி
தொலைதொடர்பு துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் சுமார் 40 சதவீதம் அதிகமாக இம்முறை ரூ.73,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்.க்கு ரூ.28,473 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த ஒதுக்கீட்டின் கீழ், நிறுவனத்தை வலுத்தப்படுத்துவதற்கான, பாரத்நெட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், பிஎஸ்என்எல்லின் மூலதனத் தேவைகள், அலைக்கற்றைக்கான செலவு, நெட்வொர்க் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி உள்ளார்.
* விளையாட்டு உபகரண உற்பத்திக்கு ரூ.500 கோடி: கேலோ இந்தியா இயக்கம் தொடக்கம்
விளையாட்டு துறைக்கான பட்ஜெட் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.3,346.54 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை கூடுதலாக ரூ.1,133.34 கோடியுடன் ரூ.4,479.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திற்கு முதல் முறையாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தரமான விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்கமளிக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் பயிற்சி மையங்கள், பயிற்சியாளர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்த கேலோ இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் தொடங்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம் மூலம் நாடு முழுவதும் திறமையான இளம் வீரர்களை கண்டறிய தேசிய அளவிலான போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டது. இனி கேலோ இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்குவதிலும் பயிற்றுநர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* வங்கதேசத்திற்கு நிதி உதவி குறைப்பு
இருநாடுகள் உறவு சீர்குலைந்துள்ள நிலையில் வங்கதேசத்திற்கான மேம்பாட்டு உதவியை ரூ.120 கோடியில் இருந்து ரூ. 60 கோடியாகக் குறைத்துள்ளது. ஆனால் பூட்டானுக்கு அதிகபட்சமாக ரூ. 2,288 கோடி, நேபாளத்திற்கு ரூ. 800 கோடியும், மாலத்தீவுகள் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு தலா ரூ. 550 கோடியும், ஆப்கனுக்கு ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நக்சல்களை ஒழிக்க ரூ.3,610 கோடி நக்சலிசத்தை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகளுக்காக பட்ஜெட்டில் ரூ. 3,610.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 20 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.
* கோயில் நகரங்களுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு
நாட்டின் 2 மற்றும் 3ம் நிலை நகரங்கள் மற்றும் கோயில் நகரங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அடுத்த 5 ஆண்டிற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மதுரை, ராமேஸ்வரம், உபியின் வாரணாசி, அயோத்தி, மதுரா, குஜராத்தின் சோம்நாத், பீகாரின் கயா உள்ளிட்ட கோயில் நகரங்களில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
* விளம்பரத்திற்கு ரூ.1,477 கோடி
பட்ஜெட்டில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இத்துறைக்கு ரூ.6,103.02 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை ரூ.4,551.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தகவல் மற்றும் விளம்பரத்திற்காக ரூ.1,476.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.1,207.67 கோடியை விட அதிகம்.
பிரசார் பாரதிக்கு ரூ. 2291.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்காகச் செலவிடப்படும். ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.509.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் திரைப்பட உள்ளடக்கத்தை பரப்புவதை மேம்படுத்த ரூ. 344.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பாதுகாப்பு துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராணுவம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தி வருவதால், பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 15 சதவீதம் அதிகமாக இம்முறை ரூ.7,84,678 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், ரூ. 2,19,306 கோடி புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ஆயுதப் படைகளின் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவினத்தின் கீழ், விமானங்கள் மற்றும் விமான என்ஜின்களுக்காக ரூ. 63,733 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு ரூ. 25,023 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையின் வருவாய் செலவினம் ரூ. 5,53,668 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியம் வழங்க ரூ. 1,71,338 கோடி செலவிடப்படும்.
எல்லைகளில் சாலை மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் எல்லை சாலை அமைப்பிற்கு ரூ.7,394 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டை விட ரூ.248 கோடி அதிகம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கான நிதி ரூ.26,816 கோடியில் இருந்து ரூ.29,100 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறையின் பங்கு 14.67 சதவீதம்.
* 15,000 பள்ளிகளில் அனிமேஷன் ஆய்வகம்
அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (ஏவிஜிசி) துறையில் திறமைகளை மேம்படுத்துவதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் கன்டென்ட்களை உருவாக்கும் ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் இத்துறையில் பல நிபுணர்கள் உருவாக்கப்படுவார்கள்.
* மின் உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு ரூ.1.01 லட்சம் கோடியாக உயரும்
அரசுக்கு சொந்தமான 9 பொதுத்துறை மின்துறை நிறுவனங்களின் மொத்த முதலீட்டை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2026-27ம் நிதியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து ரூ.1,01,762.92 கோடியாக உயர்த்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார அமைச்சகத்தின் பட்ஜெட் ரூ.21,847 கோடியிலிருந்து, ரூ.29,996.85 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மோட்டார் வாகன விபத்து இழப்பீடுக்கு வரி விலக்கு
மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தால் வழங்கப்படும் இழப்பீட்டுக்கு பட்ஜெட்டில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி, விபத்துக்களில் ஏற்படும் மரணம், நிரந்தர ஊனம் அல்லது உடல் காயம் ஆகியவற்றுக்கு தனிநபருக்கோ அல்லது அவரது வாரிசுக்கோ இழப்பீடு வழங்கப்படுகிறது. மோட்டார் வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தால் வழங்கப்படும் இந்த இழப்பீட்டிற்கு இனி வரி பிடித்தம் செய்யப்படாது. இந்த திருத்தம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
* விபி-ஜி ராம் ஜிக்கு ரூ.95,000 கோடி: 100 நாள் வேலைக்கு ரூ.30,000 கோடி
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பதில் விபி-ஜி ராம் ஜி திட்டம் சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ. 95,692.31 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ. 30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விபி-ஜி ராம் ஜி திட்டம் செயல்படுத்தப்படும் வரை, நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடரும் என்று ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* பட்ஜெட் ஆவணங்களின்படி, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 1,94,368.81 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி ரூ. 1,86,995.61 கோடியாக இருந்ததை விட சற்றே அதிகமாகும்.
* 2026-27 ஆம் ஆண்டிற்கான நில வளங்கள் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 2,654.33 கோடி. 2025-26 ஆம் ஆண்டில் இந்தத் துறைக்கு ரூ. 2,651 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி செலவினம் ரூ. 1,757.4 கோடியாக உள்ளது.
* 2025-26 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான மொத்த செலவினம் ரூ. 88,000 கோடியாக இருந்தது. ஆனால் பட்ெஜட்டில் ரூ. 86,000 கோடி ஒதுக்கப்பட்டது.
* 2026-27 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 19,000 கோடியாகும். 2025-26 ஆம் ஆண்டும் இதே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, கடந்த நிதியாண்டில் செலவினம் ரூ. 11,000 கோடியாக இருந்தது.
* தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 2026-27 நிதியாண்டிற்கான ஒதுக்கீடு ரூ. 19,200 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ. 19,005 கோடியாக இருந்தது, மேலும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி செலவினம் ரூ. 16,000 கோடியாக இருந்தது.
* பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 54,916.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் தொகை ரூ. 54,832.00 கோடியாக இருந்தது, மேலும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி செலவினம் ரூ. 32,500.01 கோடியாக இருந்தது.
* விவசாயிகளுக்கு எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை, சலுகையும் அளிக்கவில்லை. ஒன்றிய பட்ஜெட்டால் கர்நாடகாவிற்கு எந்த பயனும் இல்லை. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
* இந்திய வரைபடத்தில் கேரளா இருப்பதையே நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டார். கேரளா மீதான ஒன்றிய அரசின் தொடர்ச்சியான வெறுப்பையும், புறக்கணிப்பையுமே பட்ஜெட் காட்டுகிறது. முதல்வர் பினராயி விஜயன்
* இந்த ஹம்ப்டி டம்ப்டி பட்ஜெட்டில் மேற்குவங்கத்திற்கு வழங்குவதற்கு எதுவும் இல்லை. இந்த பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, செயலற்றது மற்றும் மக்கள் விரோதமானது. மேற்குவங்க முதல்வர் மம்தா.
* எப்படி இருந்தாலும் தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க போவதில்லை அவர்களுக்கு நாங்கள் ஏன் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜக இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கிறது. திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் கனிமொழி எம்.பி.
* ஒடிசாவின் இயற்கை வளங்களை எடுத்துச் செல்வதற்காக மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மக்களின் நலனுக்கான வள ஒதுக்கீட்டில் ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக்.
* தேசிய கண்ணோட்டத்தில், இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும், மேலும் வேலையின்மையையும் உருவாக்கும். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்.
* இந்த பட்ஜெட் மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் உள்ள 5 சதவீதத்தினருக்காகவே உருவாக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால், நாம் இரும்பின் மீது பித்தளையைப் பூசி நகைகள் செய்ய வேண்டியிருக்கும். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
* உள்நாட்டுத் திறன்களை உருவாக்குவதற்கும் பொது அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனியார்மயமாக்கலை நோக்கிய தனது உந்துதலைத் தொடர்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பி. சந்தோஷ் குமார்.
