அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று நடந்த சிறப்பு ஜல்லிக்கட்டில் 1,300 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவைகளை அடக்க 600 வீரர்கள் மல்லுக்கட்டினர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு உள்ளது. இங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதன்படி, மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இதில், 1300 காளைகளும், 600 வீரர்களும் களமிறங்கினர்.
முன்னதாக காலையில் காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், ஆர்டிஒ சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி காலை 6.30 மணியளவில் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டின. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
காலை 6.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடந்தது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, மிக்ஸி, கட்டில், மெத்தை, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
