*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு
கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சந்தைமேடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய பேருந்து நிலையத்திற்கு கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மேலும் நெடுங்காம்பூண்டியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று கீழ்பென்னாத்தூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானம் மற்றும் புதிய பாலம் கட்டுமானம் பணிகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானத்தின் அமைப்பு, தரம் மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் துணை சபாநாயகர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் சி.கே.அன்பு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் கோ.சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் அம்பிகா ராமதாஸ் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஞானசம்மந்தன் உட்பட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
