லக்னோ: ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை இருப்பதாக கூறி பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கை லக்னோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான விக்னேஷ் சிஷிர் என்பவர், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இங்கிலாந்து நாட்டு குடியுரிமை இருப்பதாகவும், அவர் மீது வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார்.
அங்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது தனக்கு மிரட்டல்கள் மற்றும் இடையூறுகள் வருவதாக விக்னேஷ் சிஷிர் கூறிய புகாரை அடுத்து, இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி லக்னோவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் அலோக் வர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதற்கான உறுதியான புதிய ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், ‘இந்த மனு சட்ட நடைமுறையை தவறாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஒருவரின் தேசியம் அல்லது குடியுரிமை தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு வரம்பு இல்லை. உயர்நீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றமோ இதுகுறித்து விசாரணை நடத்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
