திருவனந்தபுரம்: கையில் சிலம்புடன் ஆவேசத்துடன் நிற்கும் இந்தியாவிலேயே மிக அதிக உயரமான கண்ணகி சிலை திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் அருகே அமைய உள்ளது. 60 அடி உயர இந்த சிலைக்கான பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்குகின்றன. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். வருடம்தோறும் மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கில் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.
கடந்த 1997ம் ஆண்டு 15 லட்சம் பெண்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா இடம் பிடித்தது. 2009ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
வருடம்தோறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வருட பொங்கல் விழா மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது. ஆற்றுகால் பகவதி அம்மனுக்கும், கண்ணகிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கணவன் கோவலனை இழந்த ஆவேசத்தில் மதுரையை எரித்த பின்னர் கண்ணகி திருவனந்தபுரம் வந்து சாந்தமாகி குழந்தை வடிவில் இங்கு தேவியாக குடி கொண்டதாக நம்பப்படுகிறது.
இதனால் தான் பொங்கல் விழாவின் 9 நாட்களிலும் கண்ணகியின் வரலாறு இங்கு பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆற்றுகால் கோயில் அருகே பிரம்மாண்ட கண்ணகி சிலை அமைக்க இக்கோயில் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. தன்னுடைய கால் சிலம்பை கையில் ஏந்தி ஆவேசத்துடன் நிற்பது போன்ற வடிவமைப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் அறக்கட்டளை தலைவி ஷோபா கூறியது: ஆற்றுகால் கோயில் அருகே 60 அடி உயரத்தில் கண்ணகி சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான மண் ஆய்வு மற்றும் பார ஆய்வு சோதனை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. சிலை அமைப்பதற்கு ரூ. 3 கோடிக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் பொங்கல் விழா முடிவடைந்த உடன் பணிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
60 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை இந்தியாவிலேயே மிக உயரமான கண்ணகி சிலை என்பது குறிப்பிடத்தக்கதாகும். திருவனந்தபுரம் பூவார் அருகே உள்ள ஆழிமலையில் 58 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைத்த தேவதத்தன் என்பவர் தான் கண்ணகி சிலையையும் அமைக்கிறார். 8 மாதங்களில் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
