நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த தேன்மொழி, ஹாட்ரிக் எம்எல்ஏவாக உள்ளார். நான்காம் முறையாக தனக்குத்தான் சீட் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஆனால், நான்காம் முறையாக வெற்றி பெற்றால், கட்சியில் சீனியாரிட்டி கிடைத்து விடும். செல்வாக்கு பெற்று தங்களையே ஓரங்கட்டி, போட்டியாக வந்துவிடுவாரோ என்று மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் தேன்மொழிக்கு சீட் கிடைக்காமல் கவனமாய் காய் நகர்த்துவதாக மாவட்ட அதிமுக தரப்பில் கடந்த சில மாதங்களாகவே பேச்சு நிலவி நிலவுகிறது.
இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், தேன்மொழிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் செயலிலும் பாஜவினர் ஈடுபட்டுள்ளனர். தே.ஜ. கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதி பாஜவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தான் என்றும் கூறிக் கொள்ளும் பாஜவினர் முந்திரிக்கொட்டைபோல தேர்தல் பணிகளையும் துவக்கி, தங்களின் தாமரை சின்னத்தை சுவர்களில் வரையும் பணியையும் துவக்கியுள்ளனர். பாஜவின் தமிழ் வளர்ச்சி பிரிவு அமைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னங்களை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார். எம்ஜிஆர் வேடமணிந்த நாடக கலைஞர் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு வாக்கு சேகரிக்கும் பணியிலும் வேகம் காட்டி வருகிறார். பாஜவினரின் இந்த செயல் தேன்மொழி தரப்பை மட்டுமின்றி, ஒட்டுமொத்த அதிமுகவினரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இதுகுறித்து அன்பழகன் தரப்பினர் கூறும்போது, ‘‘தே.ஜ. கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளை கேட்டு பட்டியல் கொடுத்தோம். அதில், எங்களுக்கு நிலக்கோட்டை தொகுதியை ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளது. இதனால், எங்கள் கட்சியில் வேட்பாளரை இறுதி செய்துள்ளனர். முறையாக தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வௌியாகும் வரையில் தொகுதிக்குள் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதனால்தான் பணிகளை துவக்கியுள்ளோம்’’ என்றனர்.
