பொள்ளாச்சி: சுற்றுலா பகுதிகளில் கட்டுப்பாடு குறைவால் ஆழியார்-வால்பாறை மலைப்பாதையில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை என 2 வனகோட்டங்கள் செயல்படுகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனசரகங்கள் அடங்கி உள்ளது.
இங்கு யானை, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இதில் டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனத்தை கண்டு ரசிக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதிகளில் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கண்காணித்து எச்சரித்து வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்வதால் வனத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறி கிடக்கிறது.
ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் ஆழியார் பூங்கா அருகே மற்றும் டாப்சிலிப் செல்லும் வழி சேத்துமடை அருகே வனப்பகுதிகளில் உள்ள பாதைகளில் காலி பிளாஸ்க் பாட்டில்கள், டம்ளர்கள் சிதறி கிடக்கிறது. உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள், வனத்தில் சிதறிகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என சுற்றுலா பயணிகளை கண்காணித்து கட்டுபாட்டு விதித்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
