*இஎஸ்ஐ மருத்துவமனை நோயாளிகள் பாதிப்பு
சிவகாசி : சிவகாசி அருகே ஹவுசிங் போர்டு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சில தனியார் நிறுவனங்கள் கொட்டி தீ வைப்பதால் இஎஸ்ஐ மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர், கப் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட நிர்வாகம் நேரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறது. சிவகாசி சுற்றுப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் உற்பத்தி கம்பெனிகள் இயங்கி வருகின்றன.
இதில் ஒரு சில கம்பெனிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
சில்லறை வியாபாரிகளிடமும் கடைகளிடமும் சோதனை நடத்தும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சில பிளாஸ்டிக் கம்பெனியில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க இடம் இன்றி சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர்.
சில நேரம் அதிகாலையிலும் சில நேரம் நள்ளிரவிலும் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஹவுசிங் போர்டு, தேவர்குளம், இபி காலனி, ரிசர்வ்லைன் பகுதிகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்த புகை மூட்டத்தினால் இ.எஸ்.ஐ மருத்துவமனை நோயாளிகள், மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த புகை மூட்டம் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சுவாசக் கோளாறல் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குப்பைகளை கொட்டும் நிறுவனங்களுக்கு அபராதம்
சிவகாசி அருகே இஎஸ்ஐ மருத்துவமனை-வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியில் ஆனையூர் ஊராட்சிக்கு குப்பைகள் சேகரிக்கும் இடம் உள்ளது. இந்த இடத்தில் சில தனியார் பிளாஸ்டிக் கம்பெனி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆய்வு செய்த ஆனையூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் குப்பை கொட்ட வந்த வாகனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். இருந்த போதிலும் தொடர்ந்து பிளாஸ்டிக் நிறுவனங்கள் தங்களது கழிவுகளை கொட்டி தீ வைத்து வருகின்றனர்.
