லண்டன்: பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், எவர்டன் – லீட்ஸ் யுனைடெட் அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்தில் முன்னணியில் உள்ள 20 கிளப் அணிகள் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் ஆடி வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் எவர்டன் – லீட்ஸ் யுனைடெட் அணிகள் மோதின. துவக்கம் முதல் இரு அணிகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 28வது நிமிடத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியின் ஜேம்ஸ் ஜஸ்டின் நேர்த்தியாக பாய்ந்தடித்த பந்து கோலாக மாறியதால், அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதன் பின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடிய எவர்டன் அணி வீரர்கள், பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். போட்டியின் 76வது நிமிடத்தில் அந்த அணியின் தீமோ பாரி சிறப்பாக அடித்த பந்து கோல் போட்டுக்குள் சென்று கோலாக மாறியது. அதனால், இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அதன் பின் கோல்கள் விழாததால் அப்போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் ஆர்சனல் அணி, 23 போட்டிகளில் ஆடி 15 வெற்றிகளுடன் 50 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேன் சிட்டி அணி 23ல் 14 வெற்றிகளுடன் 46 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.
