×

7 பிரகாரங்கள், 16 கோபுரங்கள் கொண்ட ‘தென்னகத்து துவாரகை’; மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ‘தென்னகத்து துவாரகை’ என போற்றப்படும் ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு, ருக்மணி, சத்யபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்தில் பெருமாளும், படிதாண்டா பத்தினி என அழைக்கப்படும் செங்கமலத்தாயார் தனி சன்னதியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகின்றனர். ஆடிப்பூரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் தாயாருக்கு நடத்தப்படுகிறது.

சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்தலம் புராண சிறப்பும், வரலாற்று பெருமையும் கொண்ட திவ்ய சேத்திரமாக விளங்குகிறது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் விஷ்ணு சேத்திரங்களில் ஒன்றான இத்தலத்தில் ஒரு இரவு தங்கினால் ஆயிரம் பசுதானம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. நான்கு யுகங்களையும் கண்ட பெருமாளாக விளங்கும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, கலியுகத்தில் சரண் அடைவோருக்கு அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். பங்குனி மாதத்தில் 18 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில் கிருஷ்ண அவதாரத்தின் 32 சேவைகள் சிறப்பாக நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இந்த கோயிலில் ‘வெண்ணைத்தாழி திருவிழா’ மிகப்பெரும் தனி சிறப்பு வாய்ந்தது.

இந்தத் திருக்கோவிலில் காட்சி தரும் ஸ்ரீ சந்தான கோபால பெருமாளை கையில் வாங்கி முகுந்தாஷ்டகம் கூறி வேண்டிக் கொண்டால் நால்வகை செல்வங்களும் குழந்தை பாக்கியமும், திருமணப் பேரும், அரசு பணியும் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி. ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர், காஞ்சி மகா பெரியவர் உள்ளிட்ட பல மகான்களாலும், சங் கீத மும்மூர்த்திகளாலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. சோழர்கள், நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோவிலில் 24 சன்னதிகள், 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங் கள் மற்றும் 9 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட திவ்ய மயமான திருக்கோவிலுக்கு நாளை (புதன்கிழமை) கோபாலனுக்குரிய ரோகிணி நட்சத் திரத்தில் மகா திருக்குட முழுக்கு நடத்தப்பட இருக்கிறது. 32 குண்டங்கள் ஐந்து வேதிகைகள் அமைக்கப்பட்டு பாஞ்சராத்திர ஆகம விதி முறைப்படி அர்ச்சக ஸ்வாமிகள் இணைந்து சீரும் சிறப்புமாக இவ் விழாவை நடத்தி வருகிறார்கள். நான்கு வேதங்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் என்று ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் கொண்டாடியதற்கு ஏற்ப இந்த எம்பெருமான் சேவை சாதிக்கிறார்.

திராவிட மாடல் அரசு ஆன்மீகத்திலும் முத்திரை
கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன் கூறியது; ‘இந்த கோயிலில் குடமுழுக்கு நடந்து 15 ஆண்டுகளை கடந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மேற்கொண்ட பெரும் முயற்சி காரணமாக 4 ராஜ கோபுரங்களை புதுப்பிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்தார். கூடுதலாக பக்தர்களின் பங்களிப்போடு ரூ.16 கோடி செலவில் ராஜகோபுரம் உள்ளிட்ட 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள் பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் முழுவதும் பேவர் பிளாக் தளமும், உட்புற வளாகத்தில் கருங்கல் கொண்டும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு புதுப்பொலிவுடன் கோயில் ஜொலிக்கிறது. இதன்மூலம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான் திராவிட மாடல் அரசு ஆன்மீக தளத்திலும் தனி முத்திரை பதித்துள்ளது’ என்றார்.

Tags : Tennagatu ,Mannarkudi Rajagopalaswamy Temple ,Mannarkudi ,Srividya ,Rajagopalaswamy Temple ,Thiruvarur district ,Tennagathu Dwarakai ,Rukmani ,Satyabama Sea ,Kannan Triangle ,Satyabama ,Sengamalathaiyar ,Paditanda Pathini ,
× RELATED கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில்...