சென்னை: 77வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேசிய கொடி ஏற்றி வைத்ததார். தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
பாஜ தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.அகிம்சை முறையில் யாத்திரைகள், பேரணிகள் நடத்தி காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களைக் கலங்கடிக்கச் செய்தது. இதையெல்லாம் தெரியாத பாஜக அரசும், பாஜக தலைவர்களும், மோடியும் வரலாறு தெரியாமல் வரலாற்றுப் பிழைகளைச் செய்து வருகிறார்கள்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து வருகிற 2ம் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி, மண்டலங்கள் வாரியாகப் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஜெ.டில்லிபாபு, திலகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடியரசு தினநாளை முன்னிட்டு ராயப்பேட்டை கவுடியா மடத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கே.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஐஎன்டியூசி மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.குமார் கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சசிகுமார், வி.பாஸ்கரன்,ஐஒசி பாலு முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அண்ணா நகர் தொகுதி இரண்டாவது சர்க்கிள் சார்பில் எம்ஆர் ஏழுமலை தலைமையில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் தலைவர் எம்எம்டிஏ கோபி தேசிய கொடியை ஏற்றி நலதிட்டம் உதவிகளை வழங்கினார்.
