சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அளித்த தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதிமுக, பாஜ, தேமுதிக கட்சிகள் விருந்தில் கலந்து கொண்டன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் என பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, மாலை 5 மணிக்கு தேநீர் விருந்து தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி விருந்துக்கு வந்திருந்த ஒவ்வொருவர் இருக்கைக்கும் சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். இந்த தேநீர் விருந்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கடராமன், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் ஆகியோர் பங்கேற்றனர்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதிகள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பாஜ சார்பில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பாமகவில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேமுதிக சார்பில் எல்.சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐக்கிய ஜனதா கட்சி பாரிவேந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் புறக்கணித்தனர். அதேபோன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.
கூட்டணி விருந்து போல…
ஆளுநர் அளித்த விருந்தில், தேமுதிக சார்பில் கலந்து கொண்ட சுதீஷிடம், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிட பார்வையாளர் ஆகியோர் தனியாக அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பாஜ கூட்டணிக்கு வராமல் தேமுதிக இழுத்தடித்துக் கொண்டுள்ளது. இதனால் சீக்கிரம் கூட்டணிக்கு வரும்படி சுதீஷை நயினார் நாகேந்திரன் அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் அளித்த விருந்தில், பாஜவைச் சேர்ந்தவர்களும், கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகளும்தான் அதிகமாக இருந்தனர். இது ஏதோ கூட்டணிக்கான விருந்துபோல ஆளுநர் மாளிகை காட்சியளித்தது.
