வாஷிங்டன்: இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப், துணை அதிபர் வான்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் ஆகியோர் எதிர்ப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சியின் செனட்டர் டெட் குரூஸ் நன்கொடையாளர்களுடனான தனிப்பட்ட சந்திப்புக்களின்போது பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் பேசும் செனட்டர் டெட் குரூஸ், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக போராடி வருகின்றேன். வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவாரோ, அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று டெட் குரூஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
2028ம் ஆண்டு தேர்தலை குறிவைத்துள்ள டெக்சாஸ் குடியரசு கட்சி செனட்டரான டெட் குரூஸ், அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் பொருளாதாரத்தை சீர்குலைத்து, அவரது பதவி நீக்கத்திற்கும் வழி வகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். 2025ம் ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் வரிகளை அறிமுகப்படுத்திய பின்னர், டெட் குரூஸ் மற்றும் சில செனட்டர்கள் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் வரிகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவர் அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.
