புதுடெல்லி: அரியானாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மவுனி ராயிடம், முதியவர்கள் இருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகை மவுனி ராய், அரியானா மாநிலம் கர்னல் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். தாத்தா வயதில் உள்ள இரண்டு முதியவர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், புகைப்படம் எடுக்கும் சாக்கில் இடுப்பில் கை வைத்து அநாகரிகம் செய்ததாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நடிகை மவுனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வேதனை பதிவில், ‘கர்னல் நகரில் நடந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களின் செயல்பாடு எனக்கு மிகுந்த அருவருப்பை ஏற்படுத்தியது.
தாத்தா வயதில் உள்ள இரண்டு பேர், மேடையில் என்னுடன் புகைப்படம் எடுக்கும்போது எனது இடுப்பில் கை வைத்தனர். கையை எடுக்கும்படி நான் கூறியதும், அவர்கள் கோபமடைந்து மேடைக்கு கீழே நின்று கொண்டு ஆபாசமாக சைகை காட்டினர். என் மீது ரோஜா பூக்களை வீசி எறிந்தனர். நான் மேடையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல முயன்றப்போதும் அவர்கள் விடவில்லை. அங்கிருந்த குடும்பத்தினரோ அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ அவர்களை தடுக்கவில்லை. இது எனக்கு மிகுந்த அவமானத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால், புதிதாக வரும் பெண்களின் நிலை என்னவாகும்? சினிமா கலைஞர்களான நாங்கள் கவுரவமாக தொழில் செய்யவே வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சகித்துக்கொள்ள முடியாத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
