×

அனுமதி இல்லாமல் நீரை எடுத்தால் அபராதம்; நீர் வளங்களை பாதுகாக்க புதிய சட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழக சட்டசபையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பதிலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் நிலையான மற்றும் சமச்சீரான ஒருங்கிணைந்த மேலாண்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் உள்ள நீர் வளங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும், மேலாண்மை செய்யவும், மேம்படுத்தவும், பெருக்கவும், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை அமைப்பை உறுதி செய்வதற்கு விரிவான புதிய சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சென்னை நிலத்தடி நீர் சட்டம்-1987 நீக்கப்பட்டுவிடும். இந்த புதிய சட்டம் மூலம் தமிழ்நாடு நீர்வள மேலாண்மை ஆணையம், மாவட்ட குழுக்கள் அமைத்து உருவாக்கப்படும். மாநில மற்றும் மாவட்ட நீர்வளத் திட்டங்கள் உருவாக்கப்படும். தற்போதுள்ள மற்றும் புதிய, வணிக நீர் பயனாளர்களை ஒழுங்குமுறைப்படுத்தி, அவர்களால் உறிஞ்சி எடுக்கப்படும் நீருக்கான கட்டணம் விதிக்கப்படும்.

அவற்றோடு, வெள்ள மேலாண்மை நடவடிகைகள் மேற்கொள்ளப்படும். நீர்வள மேலாண்மை அதிகார அமைப்பின் தலைவராக தலைமைச் செயலாளர் இருப்பார். நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல அரசுத் துறை செயலாளர்களும் அந்த அமைப்பில் இருப்பார்கள். மாநில நீர்வளக் கொள்கையை உருவாக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற அமைப்புகள், எந்தவொரு நிலம், கட்டிடங்களுக்குள் நுழைந்து, கிணறு, மண், நீர்வளங்களை ஆய்வு செய்ய முடியும். சட்டத்தை மீறினால் அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பறிமுதல் செய்யலாம். கிணற்றை மூடி முத்திரையிடலாம். மின்சாரம் போன்ற மற்ற சேவைகளையும் நிறுத்தி வைக்க முடியும். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நீர் பயனாளருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் பெறப்படும்.

நீரை நிலத்தில் இருந்து எடுப்பதையும், கொண்டு செல்வதையும் இந்த சட்டம் முறைப்படுத்துகிறது. வணிக நீர் பயனாளர் எவரும், அதிகார அமைப்பின் அனுமதி பெறாமல் நீரை நிலத்தில் இருந்து பிரித்து எடுக்க முடியாது. வேறிடத்திற்கு கொண்டு செல்லவும் முடியாது. ஏற்கனவே நீரை வணிக ரீதியாக நீரை எடுத்து வரும் நீர்ப்பயன்பாட்டாளர்கள், சட்டம் அமலுக்கு வந்து 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வர்த்தக நீர் பயனரும், அனுமதியை பெறுவதற்கான கட்டணம், ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிடம் நேரடியாகவோ, இணையம் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். குடிநீர் மற்றும் தொழில் தேவைகளுக்காக நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டருக்கு மிகாமல் மேற்பரப்பு நீரை எடுக்க அனுமதி வகுத்தளிக்கப்படும். மாவட்ட கலெக்டர் அதை வழங்குவார். அதற்கும் அதிக நீர் எடுக்கும் இந்த அனுமதி சில பிரிவுகளுக்கு தேவையில்லை.

அதன்படி, குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாடு, நிலத்தில் இருந்து நீர் எடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயன்பாடுகள், அரசின் நீர் வழங்கல் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிலையம், ஆஸ்பத்திரி, கட்டமைப்புகள், அலுவலகங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட அதிகம் நீர் எடுக்காத தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், சிறிய குடிநீர் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி தேவையில்லை.

அனுமதி இல்லாமல் நீரை எடுக்கும் மற்றும் கொண்டு செல்லும் வணிக நீர் பயனாளருக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 20 மடங்கு அல்லது ரூ.20 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். 2-ம் முறை மற்றும் தொடர்ந்து மீறினால், 40 மடங்கு அல்லது ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதிக நீரை எடுத்தால் ரூ.10 ஆயிரமும், தொடர்ந்து மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Assembly ,Tamil Nadu ,Legislative Assembly ,Public Works Minister ,E.V. Velu ,Water Resources ,Minister ,Duraimurugan ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...