சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேற்றும் நேர்காணல் நடத்தினார். விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல்கட்ட நேர்காணலை கடந்த 9ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10, 12, 13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடந்தது.
இதையடுத்து 5வது நாள் நேர்காணலை நேற்று (24ம் தேதி) ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். நேற்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி நேர்காணல் நடத்தினார்.
நேற்று மாலையில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்கிற பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
