×

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினத்தன்று அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு: விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் அமைந்திருக்கும் சன்னிதானம் பகுதியில் சினிமா படப்பிடிப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜை தினத்தன்று சன்னிதானம் பகுதியில் அனுமதியின்றி ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடந்ததாக தகவல் வெளியாகின.

சமீபத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான நரிவேட்டை என்ற படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகரின் புதிய மலையாளப் படத்திற்காக இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறியது: மகரவிளக்கு பூஜை தினத்தன்று சன்னிதானத்தில் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இதை மீறி சன்னிதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராஜ் மனோகர் கூறியது: என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பை சபரிமலை சன்னிதானம் பகுதியில் வைத்து நடத்த தீர்மானித்திருந்தேன். ஆனால் அதற்கு தேவசம் போர்டின் அனுமதி கிடைக்கவில்லை.

ஏடிஜிபி ஸ்ரீஜித்திடம் கேட்டபோது பம்பையில் வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தார். இதனால் பம்பையில் வைத்துத் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால் சன்னிதானத்தில் வைத்து பத்திரிகையாளர் என்ற போர்வையில் சினிமா படப்பிடிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Makaravilakku Puja day ,Sabarimala ,Thiruvananthapuram ,Kerala High Court ,Sannidhanam ,
× RELATED கணவரின் வருமானத்தை முடக்கிய...