உளுந்தூர்பேட்டை, ஜன. 24: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பாஜ பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதனால் பாதுகாப்பு கருதி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர் லாரிகள், அதிக எடை கொண்ட சரக்கு ஏறிச்சென்ற லாரிகள் அனைத்தும் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு குறுக்கு ரோடு பகுதியில் நிறுத்தப்பட்டு திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழியாக சென்னை சென்றால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், நேர விரயம் ஏற்படுவதுடன், அதிக அளவில் டீசல் செலவாகும் என்பதால் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நாங்கள் செல்கிறோம் எனக்கூறி மடப்பட்டு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கனரக வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்னை சென்றால் வாடகை கட்டணம் கட்டுப்படியாகாது , டீசல் அதிகம் செலவாகும் என்பதால் மடப்பட்டு பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளோம், போலீசார் எப்போது அனுப்பி வைக்கின்றனரோ அப்போதே நாங்கள் செல்வோம் என்றனர். மடப்பட்டு பகுதியில் சாலையோரம் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தது. பிரதமர் பேசிவிட்டு சென்றவுடன் தங்களுடைய வாகனங்களை எடுத்து சென்றனர். இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய கனரக வாகன ஓட்டுனர்கள் காலை 9 மணியில் இருந்து சுமார் 10 மணிநேரம் காத்திருந்து வாகனங்களை எடுத்து சென்றனர்.
